top of page
Search

ஒல்லும்வாய் எல்லாம் ...673, 33, 40

09/05/2023 (796)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

பாயிரவியலில் உள்ள அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தின் மூன்றாவது குறளில், இயலும் வகைகளிலெல்லாம், அறச்செயல்களைத் தவறாமல் செய்யத்தக்க வழிகளிலெல்லாம் செய்க என்றார். காண்க 19/02/2021 (33).

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்.” --- குறள் 33; அதிகாரம் – அறன் வலியுறுத்தல்


ஒல்லும் = இயலும்; ஓவாதே = ஒழியாமல், தவறாமல்


அதாவது, எப்படி எப்படியெல்லாம் முடியுமோ, அப்படி அப்படியெல்லாம் எங்கெங்கெல்லாம் செய்ய முடியுமோ அங்கெங்கெல்லாம் அறங்களைச் செய்தல் வேண்டும் என்கிறார்.


மேற்கண்டது, அறம் செய்யும் வகைக்குப் பொதுவான அறிவுறுத்தல்.


மேலும், அதே அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் முடிவுரையாக, செய்ய வேண்டியது என்றாலே அது அறச்செயல்கள்தாம்; தள்ள வேண்டியனவெல்லாம் பழியைத்தரும் அறமல்லாத்வைகளை என்கிறார். காண்க 22/02/2021 (36). மீள்பார்வைக்காக:


“செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. “ ---குறள் 40; அதிகாரம் – அறன் வலியுறுத்தல்

செய்ய வேண்டும் என்றாலே, அது அறமாகத்தான் இருக்க வேண்டும் என்பது கூறப்பட்டது.


சரி, தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் எது அறம்? எது அறம் செய்யும் வகை?


மக்களையும் நாட்டையும் காப்பதே அறம்.

சரி, அப்போது, எதனிடமிருந்து, யாரிடமிருந்து காப்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கென்ன பதில்?


இயற்கை நிகழ்வுகளில் இருந்தும், செயற்கைத் தாக்கங்களில் இருந்தும்தான் காக்க வேண்டும். அதுதான் அறம்.


செயற்கைத் (Man made) தாக்கங்கள் என்பன பகை முதலானவை.


சரி, பகையிடமிருந்து எவ்வாறு மக்களைக் காப்பது?

அது பகைவனின் வலிமையைப் பொறுத்தது!

பகையை நாம் வெல்ல முடியும் என்றால் போர்தான் சரியான வழி. பகைவர்களைத் தலை தூக்க முடியாமல் அழித்து விடுவது என்பது சரியான ஒரு உத்தி. அதைச் செய்யலாம்.


அந்தப் பகையின் வலிமைக்கு நாம் ஈடில்லை என்றால்?... வேறு வழிகளைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.


ஒரு செயல் முடிவதற்கு நான்கு வழிமுறைகள் என்பது நமக்குத் தெரியும். காண்க 28/10/2022 (604). மீள்பார்வைக்காக:


கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறு படுத்தல், மற்றும் ஒறுத்தல். இதைத்தான் வடநூலார் “தான, சாம, பேத, தண்டம்” என்கிறார்கள்.

சரி, ஏன் இந்த நீண்ட முன்னுரை என்கிறீர்களா? நாம் அடுத்துப் பார்க்கப்போகும் குறளுக்குத் தேவைப்படுகிறது.


நம் பேராசான் என்ன சொல்கின்றார் என்றால், பகையை முற்றாக அழித்துவிட முடியும் என்றால் ஒறுத்தல் (தண்டம்) அதாவது போர்; முற்றாக அழிக்க முடியாதா, அப்போது, ஏனைய மூன்று வழிகளான, கொடுத்தல் (தான), இன்சொல் சொல்லல் (சாம), வேறு படுத்தல் (பேத) போன்றவைகளில், எது சிறந்ததோ அதைத் தெர்ந்தெடுங்கள் என்கிறார்.

சரி, நாம் குறளுக்கு வருவோம்.


ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.” --- குறள் 673; அதிகாரம் – வினை செயல்வகை


வினை = போர்; ஒல்லும் = இயலும்; ஒல்லாக்கால் = இயலாவிட்டால்;

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்று = பகையை அழிக்க வேண்டும் என்றால், இயலும் இடத்தில் எல்லாம் போர்தான் சரியான வழி; ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல் = இயலா இடங்களில், ஏனைய மூன்று வழிமுறைகளில் எது செல்லுமோ அதைக் கொண்டு அப்பகையைத் தவிர்க்க.


பகையை அழிக்க இயலும் இடத்தில் எல்லாம் போர்தான் சரியான வழி.

இயலும் இடம் என்பது நாம் பகைவனைவிட வலிமையாக இருக்கும் காலம். இயலா இடம் என்றால் நாம் பகைவனுக்குச் சமமானத் திறத்திலோ, அல்லது நாம் அவனைவிட மெலிவானத் திறத்திலோ இருப்பது. இயலா இடங்களில், ஏனைய மூன்று வழிமுறைகளில் எது செல்லுமோ அதைக் கொண்டு அப்பகையைத் தவிர்க்க.


நம்மாளு: ஐயா, வினை என்றால் போர் என்று ஏன் பொருள் எடுக்க வேண்டும்? இதுவரை, நாம் ‘செயல்’ என்றுதானே பொருள் எடுத்துள்ளோம்?


ஆசிரியர்: ம்ம்... மிகவும் சரி. நாளை இதனைச் சிந்திப்போம்.


நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Comments


Post: Blog2_Post
bottom of page