top of page
Search

ஒல்வது அறிவது ... 472

02/11/2022 (609)

வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி எனும் நான்கையும் ஆராய்ந்து பார்த்து செய்யனும் என்றார் வலியறிதல் அதிகாரத்தின் முதல் குறளில்.


நம்மாளு: ஐயா, நான் கிளம்பட்டுங்களா?


ஆசிரியர்: ஏன்? என்ன செய்தி?


நம்: ஐயா, நாலையும் பார்த்துட்டேன். அவ்வளவுதான். உடனே கிளம்பினால் வேலையைச் சீக்கிரம் முடிச்சுடலாம்.


ஆசிரியர்: தம்பி, உங்களுக்குத்தான் அடுத்த இரண்டுக் குறள்களையும் வைத்திருக்கார். கொஞ்சம் பொறுங்க. அதையும் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க.


நம்: ஏதாவது இன்னும் இருக்கா, ஐயா?


ஆசிரியர்: எது முடியும், அதாவது நான்கின் வலிமையையும் சீர் தூக்கிப் பார்ப்பது என்பது ஒரு பகுதிதான். இது திடமான உடன், அதை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, நமது மனம், மொழி, மெய்களை அந்தச் செயலின் மீது வைத்து எப்படி, எப்போது (காலம்), எங்கே (களம்) முடிப்பது என்பதை ஆராய்ந்து செய்யவேண்டும்.


ஐந்து மைல்கல் தொலைவுதான், ரஷ்யத்தலைநகரான மாஸ்கோ (Moscow). அந்த மாஸ்கோவைப் பிடித்து விட்டால், அதுதான் ஹிட்லரின் கணவு சாம்ராஜ்யம். அதுவரை எல்லாமே வெற்றியாகத்தான் இருந்தது ஹிட்லருக்கு!


ஹிட்லரிடம் பத்து லட்சம் துருப்புகள், ஆயிரக்கணக்கில் பீரங்கிகள். ஆறு லட்சம் ரஷ்ய வீரர்களை சிறை பிடித்தாகி விட்ட து. பலரைக் கொன்று குவித்தாகிவிட்டது. எஞ்சி இருப்பது வெறும் தொன்னூறாயிரம் வீரர்கள் தான் ரஷ்யாவிடம்.


ஹிட்லர் கணிக்க மறந்தது கால மற்றும் கள மாற்றங்களை!


அது சரியான ரஸ்புடிட்சா (Rasputitsa) எனும் இலையுதிர் காலம், மற்றும் கடும் குளிர்காலத்தின் துவக்கம். ரஸ்புடிட்சா காலத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்குமாம். அதில் பயணிப்பது என்பது இயலாதாம். மிகக் குளிர்ந்த வெப்பநிலையில் ஜெர்மானிய பீரங்கிகள் உரைந்துவிட்டன.


மேலும், கடுங்குளிரைத் தாங்கும் ஆடைகளும் ஜெர்மானியப் படைகளிடம் இல்லை. இந்தக் காரணிகளே ஹிட்லரின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டன. இந்தத் தோல்வியை “பார்பரோசா” (Barbarossa) தோல்வி என்று வரலாறு பதிவு செய்துள்ளது.


ஹிட்லரின் முடிவுரைக்கு முன்னுரை எழுதியது இந்த பார்பரோசா தோல்வி.


கடைசியில், ஹிட்லருக்கும் அடி சருக்கியது!


இது நிற்க.


ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.” --- குறள் 472; அதிகாரம் – வலியறிதல்


ஒல்வது அறிவது = செய்து முடிக்க வல்லதை நான்கு வலிகளையும் (strengths) சீர் தூக்கி அறிவது; அறிந்ததன் கண்தங்கி = அறிந்த பின் மேலும் தக்க இடத்தையும், சமயத்தையும் சற்று ஆலோசித்து; செல்வார்க்குச் செல்லாதது இல் = செல்பவர்களுக்கு முடியாதது ஏதும் இல்லை.


நான்கு வலிகளையும் சீர் தூக்கி, செய்து முடிக்க வல்லதை அறிந்த பின், தக்க இடத்தையும், சமயத்தையும் ஆலோசித்து, செயலைச் செய்பவர்களுக்கு முடியாதது ஏதும் இல்லை.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்





Comments


Post: Blog2_Post
bottom of page