20/10/2023 (958)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஒழுக்கம் எங்கே வெளிப்படும் என்றால் சொல்லில் இருந்து என்று சொல்கிறார். சொல்லும் சொல்லைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
வாய்மையை வரையறுக்கும்போதே கிழ்காணும் குறளை நமக்குச் சொல்லியுள்ளார். காண்க 25/01/2021 (8). மீள்பார்வைக்காக:
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.” --- குறள் 291; அதிகாரம் - வாய்மை
சொல் என்பது வெளிப்பாடின் கூறியீடு. நாம் ஐம்புலன்களினாலும் பேசுகிறோம்! அனைத்துச் சொல்களிலும் தீய எண்ணம் இருக்கக்கூடாது. இதைத்தான் ஒழுக்கமாக்க வேண்டும். இதை ஒழுக மற்ற நல் ஒழுக்கங்கள் தானாக அமையும்.
இப்படித் தீமை இலாத சொல்களைச் சொல்வதை ஒழுக்கமாக்கியவர்கள் மறந்தும் அதிலிருந்து விலகமாட்டார்கள்.
“ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.” --- குறள் 139; அதிகாரம் – ஒழுக்கமுடைமை.
வழுக்கியும் தீய வாயால் சொலல் = மறந்தும் தீய எண்ணங்களை வாய் முதலிய புலன்களால் வெளிப்படுத்துதல்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே = நல் எண்ணங்களையே வெளிப்படுத்தும் ஒழுக்கத்தை உடையவர்களுக்கு முடியா.
மறந்தும் தீய எண்ணங்களை வாய் முதலிய புலன்களால் வெளிப்படுத்துதல்என்பது நல் எண்ணங்களையே வெளிப்படுத்தும் ஒழுக்கத்தை உடையவர்களுக்கு முடியா.
தீய எண்ணங்களுக்கு ஊற்றுக்கண் பொறாமை. பொறாமை கொண்டவர்களை அழிக்க அவர்களின் பகைவர்கள் மறந்திருந்தாலும் அந்த பொறாமை எண்ணமே அவர்களை அழித்துவிடுமாம்.
“அழுக்காறு உடையவர்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடிஈன் பது.” --- குறள் 165; அதிகாரம் – அழுக்காறாமை
அழுக்காறு உடையவர்க்கு அது(வே) சாலும் = பொறாமை எண்ணம் கொண்டவர்களின் அழிவிற்கு அதுவே போதுமானது; ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது = அவர்களை அழிக்க வெளிப்பகைவர்களே தேவையில்லை. அந்தப் பொறாமையே அழிவினைத் தேடித்தரும்.
பொறாமை எண்ணம் கொண்டவர்களின் அழிவிற்கு அதுவே போதுமானது. அவர்களை அழிக்க வெளிப்பகைவர்களே தேவையில்லை. அந்தப் பொறாமையே அழிவினைத் தேடித்தரும்.
சரி, மீண்டும் ஒழுக்கமுடைமைக்கு வருவோம். முடிவுரையாக ஒரு பெரும் குறிப்பினைச் சொல்லப் போகிறார். இந்தக் குறளை நாம் முன்பும் சிந்தித்தோம். காண்க 28/01/2022 (337).
“உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.” --- குறள் 140; அதிகாரம் – ஒழுக்கமுடைமை
உலகத்தோடு பொருந்தி வாழக் கற்காதவர்கள், பல கலைகளைக் கற்றும் புத்தி கொஞ்சம் மட்டுதான். ஆடை அணியா ஊரில் ஆடை அணிந்தவன் முட்டாள் என்பது போல சிந்தித்திருந்தோம். இஃது ஒரு மேலோட்டமானப் பார்வையாகப்படுகிறது.
இந்த உலகமானது, அஃதாவது இயற்கையானது தனது ஒழுக்கத்தில் இருந்து ஒரு கணப்பொழுதுகூட விலகுவதில்லை.
காலைப் பொழுது எப்போது விடியும் என்றால் அது நினைத்தால் விடியும் என்றால் எப்படி இருக்கும் நம் நிலை! ஒழுகத்திற்கு இயற்கையைவிட ஒரு உவமை இருக்க இயலுமா என்ன?
நம் பேராசான் சொல்வது “இயற்கையை நகலெடுங்கள்” என்பதுதான். இதைத்தான் அறிஞர் பெருமக்கள் “Copy the Nature.” என்கிறார்கள்.
இயற்கையோடு ஒழுகுங்கள்; இயற்கையாக ஒழுகுங்கள். அஃதே ஒழுக்கம்.
இந்தக் கருத்து புலப்படவில்லையென்றால் என்ன கற்றும் என்ன பயன் என்கிறார் நம் பேராசான். மீண்டும் ஒரு முறை அந்தக் குறளைப் படியுங்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios