top of page
Search

ஓன்றுஎய்தி நூறு இழக்கும் ... 932

02/07/2022 (491)

“ஒன்னு வைச்சா இரண்டு; இரண்டு வைச்சா நாலு. வாங்க, வாங்க, வாங்க. வந்து உங்க அதிர்ஷ்டத்தை பாருங்க”ன்னு சூது அழைக்கும்.

முதலில் ஏதோ கொஞ்சம் கிடைக்கும். அடுத்து, சறுக்கும். விட்டதைப் பிடிக்கலாம் என்பார். முடிவில்லா சுழலில் ஆழ்வார்.


எதுவுமே கிடைக்காதபோதே, தருமன் தொடர்ந்து விளையாடினான்! ஆச்சரியமானதுதான். அங்கு அவனின் ‘ego’ அவனைத் தொடர்ந்து விளையாடச் சொன்னது.


மாடிழந்து விட்டான், -- தருமன் மந்தை மந்தையாக; ஆடிழந்து விட்டான், -- தருமன் ஆளி ழந்து விட்டான்; பீடி ழந்த சகுனி – அங்கு பின்னுஞ் சொல்லு கின்றான்: ‘நாடி ழக்க வில்லை, -- தருமா! நாட்டை வைத்திடென்றான்.” – பாஞ்சாலி சபதம்


கோயிலில் பூசை செய்பவன் சிலையைக் கடத்தி விற்று சூதாடுவதும், , வங்கியில் (bank) காசாளராக இருப்பவன் அந்தக் காசைக் கொண்டு சூதாடுவதும், வாயில் காப்போன் தான் வேலை செய்யும் வீட்டை வைத்து சூதாடுவதும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. சூது மிகப் பெரிய போதை. நமக்குச் சொந்தமில்லாததையும் வைத்து ஆடுவார்கள். தோற்றபின் என்ன செய்வது என்று அறியாமல் உயிரை மாய்த்துக் கொள்வார்கள்.

சூதின் கொடுமைகளைப்பற்றி, பாஞ்சாலி சபதத்தில், மகாகவி பாரதி மாய்ந்து, மாய்ந்து எழுதுகிறார்.


“கோயிற் பூசை செய்வோர் – சிலையைக் கொண்டு விற்றல் போலும்,

வாயில் காத்து நிற்போன் – வீட்டை வைத்திழத்தல் போலும்,

ஆயிரங்க ளான – நீதி, அவை உணர்ந்த தருமண்

தேயம் வைத்திழந்தான்; -- சிச்சீ! சிறியர் செய்கை செய்தான். “ …


“செருப்புக்கு தோல்வேண்டியே, -- இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை? விருப்புற்ற சூதினுக்கே -- ஒத்த பந்தயம் மெய்த்தவப் பாஞ்சாலியோ? --- பாஞ்சாலி சபதம்

குறளுக்கு வருவோம்.


“ஓன்றுஎய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்று எய்தி வாழ்வதோர் ஆறு.” --- குறள் 932; அதிகாரம் – சூது


ஓன்றுஎய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் = தூண்டில் இரையைப் போன்று கொஞ்சம் பெற்று, மொத்தமும் இழக்கும் சூதாடுபவர்களுக்கு; ஆறு = வழி;

உண்டாங்கொல் நன்று எய்தி வாழ்வதோர் ஆறு = நல்லதொரு வாழ்வு வாழ்வதற்கு வழி உண்டா? இல்லை


தூண்டில் இரையைப் போன்று கொஞ்சம் பெற்று, மொத்தமும் இழக்கும் சூதாடுபவர்களுக்கு நல்லதொரு வாழ்வு வாழ்வதற்கு வழி இல்லை.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




7 views0 comments
Post: Blog2_Post
bottom of page