top of page
Search

ஒன்றாமை ஒன்றியார் ... குறள் 886

14/05/2022 (442)

‘கண்படுதல்’ என்றால் என்ன?


நபிகள் (ஸல்) பெருமானார் ‘கண்ணேறு’ பற்றிய குறிப்புகளைக் காட்டியுள்ளார் என்கிறார்கள். அது விதியையே மாற்றிவிடும் என்று சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள்.


வடலூர் வள்ளல் பெருமான், திருவருட்பாவில் ‘புண்ணிய நீற்று மான்மியம்’ என்ற பகுதியில் 355 ஆவது பாடலாக திருநீறு அணிவதால் வரும் நன்மைகளைத் தொகுக்கும் போது ‘கண்ணேறது தவிரும்’ என்கிறார்.


வர்மக்கலையில், ஒரு முக்கியப் புள்ளியாக ‘திலர்த்த வர்ம புள்ளி’யைக் குறிக்கிறார்கள். நெற்றி நடுபுருவத்திற்கு அரை விரல் அளவுக்கு கீழே உள்ள இடம்.


ஒவ்வொருவருக்கும், அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ சில சக்திகள் இருக்குமாம். அது அவர்களின் பார்வையால், அறிந்தோ, அறியாமலோ மற்றவரைப் பாதித்து விடுமாம். இதன் மூலம் ஒருவரின் எண்ணங்களை மாற்றலாமாம்.


பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துகள் இவை என்று தள்ளுபவர்கள், பகுத்தறிந்தபின் தள்ளலாம். இது நிற்க.


நம் பேராசான் பயன்படுத்தும் சொற்றொடர் “கண்படின்”.


யார் கண்படின்?


“ஒன்றாமை ஒன்றியார் கண்படின்”. ‘ஒன்றாமை’ என்றால் நம்மிடம் ஒன்றி இணக்கமாக இருக்க விழையாதவர்கள். அதாவது பகைமைத் தீயை மனதிலே வைத்திருப்பவர்கள்.


‘ஒன்றியார்’ என்றால் அது போன்றவர்கள் நம்மிடம் ஒன்றி இருப்பது.

அது போன்றவர்களின் பார்வை நம்மீது எப்போதும் விழுந்து கொண்டு இருக்குமானால் ‘எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது’ என்கிறார் நம் பேராசான். ‘எஞ்ஞான்றும்’ என்றல் எப்போதும் என்று பொருள்.


‘பொன்றாமை’ என்றால் அழியாமை. அதாவது, பத்திரமாக, சுகமாக இருத்தல். அந்தப் பேறு ‘ஒன்றல் அரிது’ என்கிறார். அஃதாவது நமக்கு ‘அது இல்லை’ என்கிறார்.


சொல்லாமல் சொன்னது: உட்பகையின் கண் பார்வையிலேயே இருந்தால், அழிவு நிச்சயம் ராஜா என்கிறார்.


ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது.” --- குறள் 886; அதிகாரம் – உட்பகை


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )






11 views2 comments
Post: Blog2_Post
bottom of page