ஓல்லுங் கருமம் ... குறள் 818
11/01/2022 (320)
தீ நட்புக்கு பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்று மூன்று வகைப் பெயர்களால் சுட்டுகிறார்.
பேதையாரின் தொடர்பை விடுங்க என்று சொன்ன போது ‘கோடி’ என்ற எண்ணைப் பயன் படுத்தினார். நகுவிப்பாருக்கு மதிப்பை உயர்த்திவிட்டார். இந்த வகைக்கு பத்து கோடி!
குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். (இங்கே காணலாம் – குறள் 817 - 23/09/2021) மீண்டும் ஒரு முறை:
“நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.” --- குறள் 817; அதிகாரம் – தீ நட்பு (82)
நகைவகைய ராகிய நட்பின் = பல வகையாக நம்மை சிரித்து மயக்கும் நண்பர்களைவிட; பகைவரால் பத்தடுத்த கோடி உறும் = கண்ணுக்குத் தெரியும் பகைவரால் நமக்கு பத்து கோடிக்கும் மேல் நன்மை உண்டு
மேலும் தொடர்கிறார்:
என்ன 'உழப்புறேன்னு' சிலர் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கோம். உழப்பு என்றால் மழுப்பு, தாமதி என்று பொருளாம். உழப்பன் (quibbler) என்றால் மொக்கையான வாதங்களை வைத்து தடுத்துக் கொண்டே இருப்பவன், போலி நியாயம் பேசுபவன். அதாவது நம்மை காலி பண்ணுவான்!
‘உழப்பு’ என்ற சொல்லுக்கும் ‘உடற்று’ என்பதற்கும் தொடர்பு இருக்கும் போல.
‘உடற்று’ என்றால் ‘வருத்து’ அல்லது ‘துன்பம் அளித்து’ . குறள் 13ல் ‘உள் நின்று உடற்றும் பசி’ (இங்கே காண்க – குறள் 13 - 24/07/2021)
இப்போ ஏன் உழப்புகிறாய் என்று கேட்கிறீர்களா? சும்மாதான்! சரி, சரி. குறளுக்கு வருகிறேன்.
“ஓல்லுங் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.” --- குறள் 818; அதிகாரம் – தீ நட்பு
ஒல்லும் = முடியும்; கருமம் = வேலை; ஓல்லுங் கருமம் உடற்றுபவர் = தங்களாலே முடியும் என்ற வேலையையும் முடியாது என்பதுபோல மழப்புவாங்க, குழப்புவாங்க; கேண்மை = (அவர்களின்) நட்பை; சொல்லாடார் = நாம பேசவே கூடாதாம்; சோர விடல் = அவங்க அப்படியே இருக்கட்டும் என்று கழண்டு கொள்ள வேண்டுமாம்.
பேசியே கழுத்தறுத்தா, பேசாம நடையைக் கட்ட வேண்டியதுதான் நம்ம வேலை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
