24/05/2023 (811)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
சில பழமொழிகளைப் பார்ப்போம்.
“கற்றாரை கற்றாரே காமுறுவர்.” அதவாது, கற்றவர்கள் அவையை கற்றவர்களே விரும்புவர்.
“வெள்ளைக் காக்கை பறக்கிறது என்றால் ஆமாம், அதோ ஒன்று!”
“ஆடை இல்லா ஊரில் ஆடையணிந்தவன் முட்டாள்”
அதாவது, அறிவில் குறைந்தோரிடம் அவர்களைப் போன்றே நாமும் என்று காட்டிக் கொள்வது நன்று.
குழந்தைகளிடம் பேசும்போது நமது அறிவினைப் பயன்படுத்தக் கூடாது, உணர்வினைப் பயன்படுத்த வேண்டும், அவர்கள் உலகில் யானையும் பறக்கும்!
அதேபோல், அறிவில் குறைந்த ஆனால் வலிமைமிக்க கூட்டத்திடமும் நமக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லவும் கூடாது.
குருவி குரங்குக்கு “நீ ஏன் கூடுகட்டி பத்திரமாக இருக்கக் கூடாது” என்றதைப் போல!
அறிவில் குறைந்த, ஆனால் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களிடம் நாம் சொல்லுவதில் தவறில்லை.
அதாவது, சொல்கள் எல்லாம் பொருள் குறித்தனவே;
சொல்லின் பொருள்கள் எல்லாம் பயன் குறித்தனவே! காண்க 22/11/2021 (272). மீள்பார்வைக்காக:
“சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லின் பயனிலாச் சொல்” --- குறள் 200; அதிகாரம் – பயனில சொல்லாமை
நம் பேராசான், அவையை மூன்றாக பகுக்கிறார். அவையாவன: மிக்கார் அவை, ஒத்தார் அவை, தாழ்ந்தார் அவை.
இந்த மூன்று அவைகளுக்கும் பொதுப்பட ஒரு குறளும், ஒவ்வோர் அவைக்கும் சிறப்பாக இரண்டு குறள்கள் என்ற வகையில் இந்த அதிகாரத்தை அமைத்துள்ளார்.
குறள் 714 இல் பொதுப்பட என்ன சொல்கின்றார் என்றால் ஒள்ளியார் முன் ஒள்ளியராக இருத்தல்; அதாவது, அவையானது, பெரும்பாலும் அறிவில் மிக்கவர்களையோ, ஒத்தவர்களையோ கொண்டிருந்தால் நாமும் அவர்களைப் போல் இருத்தல் விரும்பத்தக்கது.
அதே சமயம், வயிரம் பாயாத வெளிறிய மரமாக சபை இருப்பின், நாமும் வெள்ளைச் சுண்ணாம்பு போல இருத்தல் நன்று.
வெள்ளைச் சுண்ணாம்பு எந்த நிறத்தையும் ஏற்றுக் கொள்ளும்!
வயிரம் பாயாத மரத்தை ‘வெளிறு’ என்பார்கள். சுண்ணாம்பிற்கு சுதை என்று சொல்வார்கள். சுதைச் சிற்பங்கள் என்றால் மணலும் சுண்ணாம்பும் கலந்து வடித்த சிலைகள்.
ஒள்ளிய என்றால் சிறந்த என்று பொருள்.
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“ஓளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.” --- குறள் 714; அதிகாரம் – அவையறிதல்
ஓளியார் = ஒள்ளியார்; ஒள்ளியார் முன் ஒள்ளியர் ஆதல் = அறிவில் சிறந்தவர்களைக் காணின் தாமும் ஒள்ளியர் ஆதல்;
வெளியார் = வெளிறியார்; வெளிறு = வயிரம் பாயாத மரம்; வெளியார்முன்வான்சுதை வண்ணங் கொளல் = (மற்றவர்களிடம்) நாமும் அவர்களைப் போலவே என்று நம்மை வெளிக்காட்டாமல் நிறுத்திக் கொள்க.
அறிவில் சிறந்தவர்களைக் காணின் தாமும் ஒள்ளியர் ஆதல்.
மற்றவர்களிடம், நாமும் அவர்களைப் போலவே என்று நம்மை வெளிக்காட்டாமல் நிறுத்திக் கொள்க.
“ஊரோடு ஒத்து வாழ்” என்பது அமைச்சருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே.
அவையறிதலுக்கும் அஃதே துணை!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments