09/10/2022 (587)
“… கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்… “ கும்மியடி பாடல்; மகாகவி பாரதியார்
கற்பு என்பது ஒரு கற்பனையான கடைச்சரக்கு என்று பலரும் எண்ணுகிறார்கள். மாறாக அது ‘மன உறுதி’யைக் குறிக்கிறது. இல்வாழ்வில் இணையப்போகும், இணைந்து இருக்கும் இருவரும் எந்தக் காலத்திலும் சோர்ந்து போகாமல் சேர்ந்தே பயணிப்போம் என்பதுதான் கற்பு அல்லது மன உறுதி
இல்வாழ்வில் இருக்கும் இருவருக்கிடையே பல சிக்கல்கள் தோன்றுகின்றன. இப்போது நாம் இருக்கும் ‘சந்தைமயமாக்கல்’ காலத்தில் அந்தச் சிக்கல்கள் பல வடிவங்கள் எடுக்கிண்றன. இதற்கு அடிப்படைக் காரணம் நம்பிக்கையின்மை. நம்பிக்கையின்மையால் வருவது சந்தேகம். சந்தேகத்தின் உடன் பிறப்புகள் வெறுப்பு, பொறாமை, பேராசை, மனதில் அழுக்கு, கடுமையானச் சொற்கள். விளைவு ஒழுக்கக்கேடு. இப்படி அந்தச் சந்தேகப்பேய் இல்லறத்தின் அடியையே தகர்க்கும். பலவாறு விரியும். அதன் முடிவு பிரிவாகும்.
ஆதலினால், கற்பு என்பது இருவருக்குமான ஒரு பொதுச்சரக்கு. கற்பு என்பது எங்கோ ஒளிந்து இருப்பது இல்லை.
என்ன இன்றைக்கு வேறு எங்கோ போகிறதே என்று நினைக்கிறீர்களா? இருக்கு ஒரு தொடர்பு இருக்கு.
குறள் 54 குறித்து சிந்திக்கும்போது நாம் சிலவற்றைப் பார்த்தோம். காண்க: 23/08/2021 (181)
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்.” --- குறள் 54; அதிகாரம் – வாழ்க்கைத்துணை நலம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள = நல்ல இல்லாள் அமையப்பெற்ற வாழ்க்கையைப் போன்று பொருள் பொதிந்த வாழ்க்கை எங்கே இருக்கு ஒருவனுக்கு? கற்பென்னும்திண்மை உண்டாகப் பெறின் = அதுவும், அந்த இல்லாள் மனத்திண்மையோடு அமைந்துவிடுவாளாயின்.
இது நிற்க.
நாணத்தைவிட்டு அவன் மடலேறும் எண்ணத்தில் இருக்கிறான். அவள் மடல் ஏறத் துணியமாட்டாள்.
அவளுக்கு கவலை இல்லையா என்று கேட்காதீர்கள். அவள் அவ்வாறு இருப்பது ஒரு பெருந்தகைமை என்கிறார் நம் பேராசான். ஆமாம். அவ்வாறுதான் சொல்கிறார்.
சங்காலத்தில் ‘மடலேறுதல்’ ஆண்மகன்களுக்கு என்று சொல்லிவைத்த முன்னோர்கள், பெண் மக்களுக்கு ‘ அறத்தோடு நிற்றல்’ என்ற வழிமுறையைக் காட்டியிருக்கிறார்கள்.
அறத்தோடு நிற்றலை விரித்தால் விரியும். சுருக்கமாக, ‘அறத்தோடு நிற்றல்’ என்பது காதலித்தவனையே கை பிடிப்பது, கைப் பிடித்தவனோடுதான் இல்வாழ்வு. அதனை அவள் குடும்பத்தார்க்கு தெளிவு படுத்துவது.
கடல் போல காம உணர்வு விரிந்தாலும் மடல் ஏறாப் பெண்ணின் பெருமை போற்றத்தக்கது. மேலும், அது போன்று சிறப்பானது இல்லையாம். நான் சொல்லலைங்க நம்ம பேராசான் சொல்கிறார். ஏன் என்றால் அவள்தான் அறத்தோடு நிற்கிறாளே!
“கடல்அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.” --- குறள் 1137; அதிகாரம் – நாணுத்துறவு உரைத்தல்
கடல்அன்ன காமம் உழந்தும் = கடல் போல் விரிந்த காம நோய்க்கு ஆட்பட்டாலும்; மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் = மடல் ஏறாப் பெண்ணின் சிறப்புக்கு ஒப்பு இல்லை.
அவளின் களமே வேறு. ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பதில்லை அவள். உள்ளத்தைக் காட்டி உடன் இருப்போரை உருகவைப்பவள் அவள்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments