25/11/2022 (631)
“உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா
வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம் போலவே சீறக் கூடாது ...
வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
வாலிபத்தை விட்டுவிடக் கூடாது ...
மானம் ஒன்றே பிரதானம் என்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் ...
விஜயபுரி வீரன் (1960), T.R.பாப்பா அவர்களின் இசையில், தஞ்சை இராமையாதாஸ் அவர்களின் வரிகளில், நெஞ்சைஅள்ளும் A.M. ராஜா அவர்களின் குரலில்.
நாம் பார்க்கப் போகிற குறளுக்கும், இந்தப் பாட்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.
பெரிய சக்கரங்களை உடைய தேர்கள் கடலில் ஓடாது; கடலில் ஓடும் நாவாய்களும், அதாவது படகுகளும், நிலத்தில் ஓடாது.
அதை அதை, அந்த அந்த இடம் தெரிந்து பயன்படுத்த வேண்டும் என்கிறார் நம் பேராசான்.
“கடலோடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.” --- குறள் 496; அதிகாரம் – இடனறிதல்
கால்வல் நெடுந்தேர் கடலோடா = வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேர்களும் கடலில் ஓடாது; கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா = கடலிலே ஓடும் நாவாய்களும் நிலத்தில் ஓடாது.
இது பிரிது மொழிதல் அணி. உவமையை மட்டும் கொடுத்துவிட்டு மீதத்தை வாசகர்களுக்கே விட்டுவிடுவது.
மூன்று செய்திகள். 1. இடம் முக்கியம்; 2. இடத்தை வைத்துதான் மதிப்பு; மற்றும் 3. இருக்கும் இட த்தில் இருந்தாலும் அடக்கம் அவசியம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments