25/02/2024 (1086)
அன்பிற்கினியவர்களுக்கு:
விதுப்பு என்றால் விரைதல் என்று பொருள். கண் விதுப்பு அழிதல் என்றால் அவரை விரைவாக காண மாட்டோமா என்றுத் தேடித் தேடி வருத்தமுறுதல்.
படர் விதுப்பு அழிதல் அதிகாரத்தைக் கண் என்று முடித்தார். அடுத்த அதிகாரம் கண் விதுப்பு அழிதல். இந்த அதிகாரத்தின் முதல் குறளைக் கண் என்றே தொடர்கிறார்.
அதற்கு முன் சில புது சொல்களைக் கவனிப்போம். கலுழ் என்றால் பொழிவது, சொரிவது, ஊற்றுவது, அழுகை, கலங்குவது என்றெல்லாம் பொருள்படும்.
கண் கலுழ்வது என்றால் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன என்று பொருள். அழுகாச்சி என்றும் பொருள்! தண்டா என்றால் தணியாத என்று பொருள். குறளைப் பார்ப்போம்.
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது. - 1171; - கண்விதுப்பு அழிதல்
தண்டா நோய் யாம் கண்டது கண் தாம் காட்ட = அவர் இப்போது என்னைப் பிரிந்து சென்றிருப்பதனால் தணியாத காமநோய் என்னை வாட்ட கங்குல் வெள்ளத்தில் கலங்கிப் போவதற்குக் காரணமே இந்தக் கண்கள் தாம். இவைதாம் அவரை எனக்கு முதல் முதலில் காட்டின; கண் தாம் கலுழ்வது எவன் கொலோ = ஆனால், இதே கண்கள்தாம் தவறு என்னவோ என் மேல் இருப்பதுபோல் அவரை நீ ஏன் எனக்குக் காட்ட மறுக்கின்றாய் என்று கண்ணீர் சொரிகின்றன! என்ன சொல்வேன்?
அவர் இப்போது என்னைப் பிரிந்து சென்றிருப்பதனால் தணியாத காமநோய் என்னை வாட்ட கங்குல் வெள்ளத்தில் கலங்கிப் போவதற்குக் காரணமே இந்தக் கண்கள் தாம். இவைதாம் அவரை எனக்கு முதல் முதலில் காட்டின. ஆனால், இதே கண்கள்தாம் தவறு என்னவோ என் மேல் இருப்பதுபோல் அவரை நீ ஏன் எனக்குக் காட்ட மறுக்கின்றாய் என்று கண்ணீர் சொரிகின்றன! என்ன சொல்வேன்?
அவளின் வேதனையைக் கண்களின் மேல் ஏற்றிச் சொல்கிறாள்!
இந்தக் கண்கள் முதலில் அவரைப் பார்த்தபோதே ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனையும் செய்யவில்லை. அது போகட்டும். இணைந்தபின் இவை அவருடன் நன்றாகப் பழகியும் இருந்தன. சரி, போனவர் வருவார் என்று ஆறுதல் கொள்ளாமல் துன்பத்தால் என்னைத் துளைப்பது ஏன்?
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன். - 1172; கண் விதுப்பு அழிதல்
பைதல் = துன்பம்; உழப்பது = வருந்துவது; உண்கண் = விழுங்கிய கண்கள்;
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் = அப்போதே ஆராய்ந்து பாராமல், முதலில் அவரைப் பார்த்தபோதே அவரை அப்படியே விழுங்கிய இந்தக் கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் = அவருடன் நன்றாகப் பழகிய பின்னும், அவரின் நிலையை உணர்ந்து அவருக்காகப் பரிவு கொள்ளாமல் துன்பத்தில் அமிழ்வது ஏன்?
அப்போதே ஆராய்ந்து பாராமல், முதலில் அவரைப் பார்த்தபோதே அவரை அப்படியே விழுங்கிய இந்தக் கண்கள், அவருடன் நன்றாகப் பழகிய பின்னும், அவரின் நிலையை உணர்ந்து அவருக்காகப் பரிவு கொள்ளாமல் துன்பத்தில் அமிழ்வது ஏன்?
அவரின் இயல்புகளைச் சரியாக ஆராய்ந்து அறியாமல், அன்றைக்குப் பல இளித்துக் கொண்டு அவரை நோக்கிய கண்கள், இன்று அவர் அருகில் இல்லை என்றபோது அழுவது நகைப்புக்கு உரியது என்கிறாள். இந்தக் குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 01/10/2021. மீள்பார்வைக்காக:
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து. - 1173; - கண்விதுப்பு அழிதல்
எப்படி இருந்தாலும் சிரித்துக் கொண்டே இருங்கள். நாளைச் சந்திப்போம்.
நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments