29/08/2022 (548)
அமர்த்தலாக உட்கார்ந்தான். அமர்தலாகச் சொன்னாள் என்றெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம்.
‘அமர்த்தல்’ ஆக இருக்கு என்றால் அமர்களமாக, கர்வமாக, அலட்சியமாக இருக்கு என்பதெல்லாம் நாம் தற்காலத்தில் எடுத்துக் கொள்ளும் பொருள்.
ஆனால், அந்தக் காலத்தில் ‘அமர்த்தல்’ என்றால் ‘மாறுபட்டு’, ‘வேறுபட்டு’, ‘பொருந்தாது’ இருப்பது என்று பொருள்.
‘வெகுளி’ என்றால் அப்பாவி இப்போது. ஆனால், அந்தக் காலத்தில் ‘கோபம்’ என்று பொருள். அது போல பொருள் மாறிவிட்ட சொல் ‘அமர்த்தல்’.
இது நிற்க.
நம்மாளு: …கொஞ்சம் நஞ்சு, கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்; கொஞ்சம் மிருகம், கொஞ்சம் கடவுள் ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்; சந்திரலேகா...சந்திரலேகா... கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு; ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்…”
என்ற பாடலை பாடியவாறு நம்மாளு நுழைஞ்சாரு. அதாங்க, 1993 ல் வந்த “திருடா, திருடா” என்ற திரைப்படத்தில் அனுபமா, சுரேஷ் பீட்டர்ஸ் பாடியது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை, கவியரசு வைரமுத்து கற்பனை.
அவன்: என்ன தம்பி சிச்சுவேஷன் ஸாங்கா (situation songஆ)?
நம்மாளு: எனக்கெப்படி அண்ணே தெரியும் உங்க நிலைமை? சொல்லுங்க. என்ன செய்தி இன்றைக்கு.
அவன்: அதான் அவளோட கண் எமனா இருக்குன்னு சொன்னேன் இல்லையா, அது கொஞ்சம்கூட அவளுக்கு பொறுத்தமாக இல்லை தம்பி.
நம்மாளு: அதான் செய்தியா?
அவன்: இந்தக் குறளைப் பாரு.
“கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.” --- குறள் 1084; அதிகாரம் – தகை அணங்கு உறுத்தல்
பெண்மை நிறைந்து, அப்பாவியாக இருப்பது போல் இருக்கும் இந்தப் பெண்ணிற்கு; அவள் பார்வை பார்ப்பவர்களைக் கொல்வதால் அது கொஞ்சம்கூட பொறுத்தமாக இல்லை.
பெண்தகைப் பேதைக்கு = பெண்மை நிறைந்து, அப்பாவியாக இருப்பது போல் இருக்கும் இந்தப் பெண்ணிற்கு;
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தால் அமர்த்தன கண் = அவள் பார்வை பார்ப்பவர்களைக் கொல்வதால் அது கொஞ்சம்கூட பொறுத்தமாக இல்லை;
அமர்த்தல் = மாறுபடுதல்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments