07/11/2021 (257)
கண்என்ப வாழும் உயிர்க்கு என்று குறள் 392 ல் முடித்திருந்தார். அடுத்த குறள் ‘கண்ணுடையர் என்பவர்’ யார் என்று சொல்கிறார்.
கண் என்ற சொல் ஒரு குறியீடு. இலக்கணத்தில் இது ஆகுபெயர்.
கண் என்றால் நோக்கு என்று நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். குறிப்பறிதல் (71ஆவது) அதிகாரம் முழுமையும் நோக்குதான்.
கற்று அறிந்தவர்களுக்கு புறக்கண் இல்லை என்றாலும் கூட கண்ணுடையவர்கள்தான். கண்ணுடையர் என்றாலே கற்றவர்கள் என்று பொருள்.
முறைசார் கற்றல் மட்டும் கற்றல் அல்ல. அது ஒரு பாதை அவ்வளவுதான். சுய அறிவை மழுங்கடிக்க சுலபமான சாதனம். சுய விளம்பரத்திற்கு அருமையான அங்கிகாரம். தேவையா? என்றால் இந்த காலகட்டத்தில் மிகவும் தேவை. அதனினும் அவசியம் ஆழங்கால் கற்றல், அதன் வழி நிற்றல்.
நன்றாக கற்று உணர்ந்து அதனை பிறர்க்கும் எடுத்து உரைப்பவர்கள், தான் அவ்வழி நடக்காவிட்டால் என்ன சொல்வது அவர்களை? பேதைகள், கண் இருந்தும் கண் இல்லாதவர்கள். நம் பேராசான் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
“ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல்.” --- குறள் 834; அதிகாரம் – பேதமை
நன்றாக கற்று உணர்ந்தும், பிறர்க்கு அதனை எடுத்துச் சொல்பவர்கள், தான் அந்த அறிவால் பயன் பெறவில்லை என்றால் அவர்களைவிட முட்டாள்கள் இல்லை என்கிறார் நம் பேராசான்.
சரி, நாம கண்ணுக்கு வருவோம்.
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்.” --- குறள் 393; அதிகாரம் – கல்வி
கண்ணுடையர் என்பவர் கற்றோர் = கண் இருக்கு என்று சொன்னாலே அவர்கள் கற்று அறிந்தவர்கள்தான்; முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர் = கற்று அறியாதவர்களுக்கு புறக்கண்கள் என்ற இரண்டு இருந்தாலும் அது ஒரு முரண். அதாவது ஊனம்.
கற்க கசடு அற; கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக!
அந்தகக்கவி வீரராகவர் எனும் புலவர் அந்த காலத்தில் இருந்தாராம். அவர் இயற்றியப் பாடல்கள் ‘தனிப்பாடல் திரட்டில்’ இடம் பெற்றுள்ளன. அவரின் சொந்த ஊர் காஞ்சிபுரம். பாட்டு பாடியே இலங்கையில் ஒரு ஊரைப் பிடித்தவர்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments