30/09/2022 (579)
அவன் கண்ணுக்குள் இருப்பதால் அவளுக்கு ஒரு சிக்கல். கண்ணை மூட முடியவில்லை. அது மட்டுமா?
“மையிட்டு எழுதோம், மலரிட்டு யாம் முடியோம் …” என்று ஆண்டாள் நாச்சியார் சொல்வதுபோல, கண்களுக்கு அஞ்சனம் தீட்ட முடியவில்லை.
ஏன் என்றால், மையிடும் போது என் கண்களை நான் பார்க்க வேண்டும். அந்த நொடி அவரைக் காண முடியாதல்லவா! அந்த சில நொடிகள் அவர் மறைந்துபோவார். அதனால், மையிட்டு எழுத முடியாது என்கிறாள்.
“கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.” --- குறள் 1127; அதிகாரம் – காதல் சிறப்பு உரைத்தல்
என் காதலர் என் கண்களுள் இருக்கிறார் என்பதால் கண்ணுக்கு மையிட மாட்டேன்! அந்த மையிடும் நேரம் மறைந்து போவார் என்பதால்!
கரப்பாக்கு = மறைதல்; கரப்பு = மறைத்தல்;
காதலவராகக் கண்ணுள்ளார் கண்ணும் எழுதேம் = என் காதலர் கண்களுள் இருக்கிறார் என்பதால் கண்ணுக்கு மையிட மாட்டேன்!
கரப்பாக்கு அறிந்து = அந்த மையிடும் நேரம் மறைந்து போவார் என்பதால்!
ஆனால். இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த ஊர் அவரை அன்பில்லாதவர் என்று பழிக்கிறது என்று மேலும் ஒரு பாடலில் சொல்கிறாள்.
அதனை நாளை பார்க்கலாம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments