கனவினும் இன்னாது ... குறள் 819
12/01/2022 (321)
தீ நட்புக்கு மூன்று பெயர்களை நேரடியாகப் பயன்படுத்தினார். அவையாவன: பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார்.
அதிலேயும், ஒன்றுக்கு ஒன்று மோசம் என்பது போல, ஒரு வரிசை முறை வைத்தார். அடுத்தது, மேலும் ஒரு வகையைச் சொல்லி முடிக்கப் போகிறார். அவர்கள்தான் வஞ்சகர்கள்.
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் அல்லர் இவர்கள். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று செய்தே விடுபவர்கள் இவர்கள்.
செயல் வீரர்கள்!
இவர்களை கனவிலும் ஒதுக்க வேண்டுமாம்!
‘கேண்மை’ என்று இதுவரை சொல்லிவந்த நம் பேராசான், இந்த வகைக்கு அப்படிச் சொன்னால் கூட தப்பு என்று நினைத்திருப்பார் போலும். இவர்களை குறிப்பிடும்போது ‘தொடர்பு’ என்று சொல்லி நிறுத்திவிடுகிறார். கிட்டக்கூட வரக்கூடாது என்பதுபோல.
“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.” --- குறள் 819; அதிகாரம் – தீ நட்பு
கனவினும் இன்னாது மன்னோ = கனவிலேயும் கசக்கும் இல்லையா; மன்னோ = அசைநிலை – பொருள் இல்லை; வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு = சொல்வது வேறு, செய்வது வேறு என்பவர்களின் தொடர்பு.
கனவிலேயும் கசக்கும் என்றதால் நனவில் அதைவிட கசக்கும் என்பது சொல்லாமலே பெற்றாம்.
இதற்கும் இன்னுமொருபடி இருக்காம். அந்த வகை வஞ்சகர்கள் என்ன பண்ணுவாங்க என்றால் நம்மிடம் வந்து நம் கருத்தை கருத்தூன்றி கேட்பார்கள். அதை ஆமோதிக்கவும் செய்வார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு ஒரு சபையிலே அந்தக் கருத்துகளை எடுத்துவைத்து அதைத் தாக்குவார்கள், பழிப்பார்கள். நம்மை ஒன்றும் இல்லாமல் ஆக்குவார்கள்.
மறுதினமே, வாலைக் குழைத்துக் கொண்டு மீண்டும் ஒட்ட வருவார்கள் நம்மிடம். பல சமாதானங்களோடு. இவர்களின் வஞ்சகத்தனத்தை மறைக்க பல நர்த்தனங்கள் ஆடுவார்கள். அவனா இது என்பது போல இருக்கும். இதை ஆங்கிலத்தில் Narcissist Personality Disorder (NPD) என்பார்கள். விழிப்பதற்குள் விஷம்!
அக்குறளை நாளை பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
