07/03/2023 (733)
பல அறக் கருத்துகளை மாவலி வாயிலாக கம்ப பெருமான் பதிவு செய்கிறார்.
கற்றறிந்தவர்கள் ‘துன்னினர்; துன்னிலர்” அதாங்க, வேண்டியவர்கள்; வேண்டாதவர்கள் என்று மாறுபாடு காட்டமாட்டார்கள். நடுவு நிலைமையோடு இருப்பார்கள் என்றார்.
அடுத்து “கொள்ளுதல் தீது; கொடுத்தல் நன்று” என்றார். நாம் முன்னர் ஒரு குறளைப் பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 30/06/2021 (128):
“நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.” --- குறள் 222; அதிகாரம் – ஈகை
நல்லாறு எனினும் கொளல்தீது = நல்லதுக்கு இதுதான் வழின்னு சொன்னாலும் இரத்தல் தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று = கொடுப்பதால் பரலோகம் போக முடியாதுன்னு சொன்னாலும் கொடுப்பது சிறந்தது
இது நிற்க. நாம் மாவலி அடுத்து என்ன சொல்கிறார் என்று கேட்போம். ஆம், இவர் தானவீரன் கர்ணனுக்கு முன்னோடி.
மாவலி: “ஆச்சாரியாரே, என் தந்தைக்கு ஒப்பானவரே, என்மேல் உள்ள கருணையினால் நீங்கள் எடுத்துச் சொல்கிறீர்கள். உங்களை வணங்குகிறேன்.”
அழிந்துவிடுவேன் என்று சொல்கிறீர்கள். இந்த பரந்துபட்ட உலகில் இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கள் என்று கருதப்படுவதில்லை. இறந்தும் புகழுடம்போடு வாழ்பவர்கள் ஏராளம்.
தனக்கு வருமை வரும்போது தன் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் இரந்தவர்களை, அதாவது, தானம் கேட்டு வருபவர்களை நாம் வீழ்ந்தவர்கள் என்று சொல்லலாம். அப்படியே வைத்துக் கொண்டாலும், இந்தப் பூமிப்பந்தில் எப்போதும் நிலையாக இருப்பவர்கள் யார்? அனைவருமே அழியப் போகிறவர்கள் தாமே? இதிலே புகழுடம்போடு நிலைப்பவர்கள் ஈந்தவர்களைவிட யாராக இருக்க முடியும்?
"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது ஏந்திய கைகொடு இரந்தவர்;-எந்தாய்! வீந்தவர் என்பவர் வீந்தவரேனும், ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 20
மேலும் தொடருவோம். அதுவரை, மடி ஆண்மையை மாற்றுவதை மட்டும் மறந்துடாதீங்க! அதாங்க, சோம்பலைத் தவிர்பது!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments