கம்பராமாயணம் முடிய இம் மொழி ...
10/03/2023 (736)
குறள் 166ல் பிறருக்கு கொடுப்பதைத் தடுப்பவன் உண்ணவும் உடுக்கவும் இல்லாமல், அவன் மட்டுமல்ல அவன் சுற்றமும் சேர்ந்தேஅழியும் என்றார் நம் பேராசான் வள்ளுவப் பெருந்தகை. கம்ப பெருமான் மாவலியின் வாயிலாக மேற்கண்ட கருத்தையே தெரிவித்துள்ளார் என்பதையும் பார்த்தோம். மேலும் தொடர்வோம்.
வந்திருப்பவன் ‘கொடியவன்’ என்று மந்திரியும் ஆச்சாரியருமாக இருந்த சுக்கிராச்சாரியார் உரைத்த சொல்லை மாவலி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
மாவலியின் இடித்துரைத்த கருத்துகளுக்கு மறுமொழி ஏதுவும் பேசவும் இல்லை ஆச்சாரியார்.
மாவலி தான் சொல்ல வேண்டியன எல்லாம் மொழிந்த பிறகு ஒரு நிலைக்கு வந்தார். பின், வாமனனாக வந்துள்ள, அந்த நெடியவனின், இரைஞ்சி நிற்கும் அச்சிறிய கரங்களில் “அடி மூன்றும் நீ அளந்து கொள்க” என்று நீரினால் தாரைவார்த்துக் கொடுத்தார்.
“முடிய இம் மொழி எலாம் மொழிந்து மந்திரி கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்.” --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 23
அடுத்துவரும் பாடல் கம்பெருமானின் உவமையின் உச்சம். மாவலியின் செயலை உயர்த்திச் சொல்ல வேண்டும். அதே சமயம், அங்கே வாமனனாக வந்த அந்த நெடியவனின் விண்ணுற ஓங்கி வளர்ந்த உருவத்தையும் சொல்ல வேண்டும். நினைத்துப் பார்த்த நம் கம்ப பெருமான், ஒரே வரியில் சொன்னார் மாவலி செய்த உதவியைப் போலவே அந்த குறளன் ஓங்கினான் என்றார்.
முதலில் அந்த வாமனின் உருவம் எவ்வாறு இருந்தது என்று சொல்கிறார். தொடை நடுங்கிகளும் இகழக் கூடிய வகையில் இருந்ததாம். அந்த தான நீர் கையில் தீண்டியவுடன், எதிரே நிற்பவர்கள் அஞ்சும் படியாக வானுர வளர்ந்தான் என்கிறார். அதற்கு உவமைதான் ‘உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே’ என்கிறார். அதாவது அந்த நெடியவனுக்கு மாவலி உதவிய உதவியைப் போலவே என்கிறார்.
இருவரும் ஒரு சேர விசுவரூபம் எடுத்ததை படம் பிடிக்கிறார் கம்ப பெருமான்.
“கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும் பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர் வியந்தவர் வெருக் கொள விசும்பின் ஓங்கினான் – உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.” --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 24
ஆகையினால் கொடுப்பீர்; கொடுப்பதை தள்ளியும் போடாதீர்; பிறருக்கு கொடுப்பதை ஒரு போதும் தடுக்காதீர் என்கிறார்கள் ஆன்றோர்கள்.
மேலும் தொடருவோம். அதுவரை, மடி ஆண்மையை மாற்றுவதை மட்டும் மறந்துடாதீங்க! அதாங்க, சோம்பலைத் தவிர்பது!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
