21/02/2024 (1082)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஐயகோ, நான் இந்தத் துன்பத்தை மறைக்க மறைக்க அது மேலும் மேலும் எழுகிறது (குறள் 1161). இதை மற்றவர்கள் அறியா வண்ணம் மறைக்கவும் முடியவில்லை; சரி, அவருக்கு எப்படியாவது தெரிவித்துத் திரும்ப அழைக்கலாம் என்றால் அதற்கும் என் நாணம் தடுக்கின்றது என்கிறாள்.
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும். - 1162; - படர் மெலிந்து இரங்கல்
கரத்தல் = மறைத்தல்; இந் நோயைக் கரத்தலும் ஆற்றேன் = இந்தக் காம நோயை மறைக்கவும் வழியற்றவளாக இருக்கிறேன்; நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் = அவருக்கு எப்படியாவது தெரிவித்துத் திரும்ப அழைக்கலாம் என்றால் அதற்கும் என் நாணம் தடுக்கின்றது. என்ன செய்வேன்?
இந்தக் காம நோயை மறைக்கவும் வழியற்றவளாக இருக்கிறேன். அவருக்கு எப்படியாவது தெரிவித்துத் திரும்ப அழைக்கலாம் என்றால் அதற்கும் என் நாணம் தடுக்கின்றது. என்ன செய்வேன்?
காவு என்றால்? காவு கொடுப்பது என்றால் பலி கொடுப்பது என்று தற்காலத்தில் வழங்குகிறோம்.
அஃதாவது, ஒன்றுக்கு ஈடாக மற்றொன்றைக் கொடுப்பது. என் உயிரைக் கொடுத்த உனக்கு நான் கோழியின் உயிரை, ஆட்டின் உயிரைக் கொடுக்கிறேன் என்பது போல!
தனிப்பட்ட நன்மைகளுக்காக சமுதாய அல்லது குழுவின் நன்மைகளை பலி கொடுப்பது அல்லது காவு கொடுப்பது என்றாகும்.
ஆனால், அக்காலத்தில் “காவு” என்றால் ஒரு கம்பின் இரு முனைகளிலும் சம எடையுள்ளப் பொருள்களை வைத்துத் தோளில் தொங்கப் போட்டுக் கொள்வது. அந்தக் கம்பிற்குப் பெயர் காவுத்தண்டு. அதாங்க, காவடி என்று சொல்கிறோமே அதேதான்!
என் ஆசிரியர் எப்போதும் சொல்வார்; உறக்கம் என்பதுதான் சரி; தூங்குதல் என்பது தவறு என்று! தூங்குதல் என்றால் தொங்குதல் என்று பொருளாம். நான் தீங்கிட்டேன் என்றால் நான் _____ங்கிட்டேன் என்று பொருள்!
சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? காவு, தூங்கு என்ற சொல்களை மறக்காதிங்க.
அவளின் உயிரின் மேல் ஒரு காவடியாம். அதன் ஒரு பக்கம் காமம்; மறு பக்கம் நாணம். இந்த இரண்டும் என்னை ஒரு வழி செல்லாமல் பொறுக்க முடியாத் துன்பத்தைத் தந்து அலைக்கழிக்கின்றன என்கிறாள்.
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து. - 1163; - படர் மெலிந்து இரங்கல்
நோனா என் உடம்பின் அகத்து = துன்பத்தைப் பொறுக்காத என் உடம்பின் உள்ளே இருக்கும்; உயிர் காவாத் தூங்கும் காமமும் நாணும் = உயிரின் மேல் ஒரு காவுத்தண்டு. அதன் ஒரு முனையினில் காமமும், மறு முனையில் வெட்கமும் தொங்கி ஊஞ்சல் ஆடுகின்றன. நான் படாதபாடு படுகின்றேன்.
துன்பத்தைப் பொறுக்காத என் உடம்பின் உள்ளே இருக்கும் உயிரின் மேல் ஒரு காவுத்தண்டு. அதன் ஒரு முனையினில் காமமும், மறு முனையினில் வெட்கமும் தொங்கி ஊஞ்சல் ஆடுகின்றன. நான் படாதபாடு படுகின்றேன்.
நோனா உடம்பு என்று இரு குறள்களில் பயன்படுத்தியுள்ளார். நாணுத் துறவு உரைத்தல் என்னும் அதிகாரத்தில் பயன்படுத்தியதை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 04/10/2022. மீள்பார்வைக்காக:
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. - 1132; - நாணுத்துறவு உரைத்தல்
வெட்கத்தை விட்டு விட்டு, நோகாத இந்த உடம்பும் உயிரும் இப்போது மடல் ஏறப் போகின்றன.
அவளின் காவடியாட்டம் ஓயாது!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments