கரப்பிடும்பை இல்லாரைக் ... குறள் 1056
Updated: Feb 10, 2022
09/02/2022 (349)
இரக்கத்தக்காரைக் கூறித்து சொல்லிக் கொண்டேவருகிறார். கரப்பிலா நெஞ்சம், கரத்தல் கணவிலும் தேற்றாதார், கரப்பிலார் வையகத்துக் காணின் என்பனவற்றைத் தொடர்ந்து மேலும் தொடர்கிறார்.
கரப்புகூட ஒரு நோய்தான் என்கிறார். சிலர் எதையெடுத்தாலும் மறைத்து வைப்பார்கள். சின்ன செய்திகளிலிருந்து, பெரிய செய்திகள்வரை மறைப்பார்கள். யாருக்கும் தெரியக்கூடாது என்று இருப்பார்கள். அது மனதை சுருக்கிவிடும். பகிர்ந்து கொள்வதால் பல நண்மைகள் இருக்கு. மகிழ்ச்சியான செய்திகளைப் பகிரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அல்லனவற்றைப் பகிரும்போது அது பாதியாக குறையும்.
நாம் கடவுளர்களை போற்றிப் பாடுகிறோம், வாழ்த்திப் பாடுகிறோம். சூரியனேப் போற்றி, சந்திரனேப் போற்றி, பல்லாண்டு, பல்லாண்டு, பல கோடி நூறாயிரம் என்றெல்லாம் நாம் உச்சரிக்கும் போது நம் மனம் நமக்குத்தான் அது என்று படம் பிடித்து வைத்துக் கொள்ளும். அதை நோக்கி நம்மை நகர்த்தும்.
அது மட்டுமல்ல! நீங்கள் மற்றவர்களைப் பாராட்டும் போது, முதலில் உங்கள் மனம் விரிவடையும். நாம் எதை வெளிப்படுத்தினாலும், அதை இந்தப் பிரபஞ்சம் பல மடங்காக்கி நமக்குத் திருப்பி அனுப்பும்.
பாராட்டனும் என்று நினைப்போம். மனம் விட்டு பாராட்டத் தொடங்குவோம். நீ நல்லா பண்ணப்பா என்று தொடங்கி உடனே ஒரு ‘ஆனால்’ போடுவோம். ஆனால், நீ என்ன பண்ணியிருக்கனும் என்றால் … என்று தொடர்ந்து, அந்தப் பாராட்டும் மனதை மூடிவிடுவோம். கவனித்துப் பாருங்க தெரியும்.
நமது குற்றம் காணும் மனது உடனே வெளிப்படும். ரொம்ப பாராட்டிட்டா, இவனுக்குத் தலைக்கணம் ஏறிடுமா? வேணாம். அடக்கியே வைப்போம் என்று சுருக்கிக் கொள்வோம்.
அதே போன்று தான், நமக்கும் நிகழும் என்பதை நாம் மறந்து விடுவோம்.
அருகில் உள்ளவர்களைப் பாராட்ட நமக்கு மனது வராது என்ற காரணத்தால்தான் உளவியல்ரீதியாக கடவுளர் போற்றித் திருஅகவல்கள் இருக்கு என்று நினைக்கிறேன்.
எல்லாரையும் தாராளமாகப் பாராட்டுங்க! மனதை விசாலமாக்குங்க. மகிழ்ச்சி இரட்டிப்பாகும். ஒளிச்சு வைக்காதீங்க. அதுவும் கரப்பிடும்பைதான்.
“கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.” --- குறள் 1056; அதிகாரம் – இரவு
ஒருங்கு = ஒரு சேர; கரப்பிடும்பை இல்லாரைக் காணின் = கரப்பு எனும் நோய் இல்லாதவரைக் கண்டால்; நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் = நிரப்பு எனும் வறுமையால் வரும் துண்பங்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக இல்லாமல் போகும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
