top of page
Search

கரவாது உவந்தீயும் ... 1061, 1062, 04/06/2024

Writer's picture: Mathivanan DakshinamoorthiMathivanan Dakshinamoorthi

04/06/2024 (1186)

அன்பிற்கினியவர்களுக்கு:

பொருட்பாலில் ஒழிபியலில் சான்றாண்மை (99 ஆவது), பண்புடைமை (100), நன்றியில் செல்வம் (101), நாணுடைமை (102), குடி செயல் வகை (103) என்று அதிகாரங்களை அமைத்துள்ளார். அடுத்து உழவு (104), நல்குரவு (105), இரவு (106).

 

அவற்றைத் தொடர்ந்து இரவச்சம் (107), கயமை (108) என்று இரு அதிகாரங்களை வைத்துப் பொருட்பாலை முடிக்கிறார். இந்த இரு அதிகாரங்களையும் நாம் பார்க்க வேண்டும்.

 

ஏதும் இல்லாதவர்கள் மற்றவர்களிடம் கை ஏந்துவது இரவு. இந்த இரவு மிகக் கொடியது. இந்த நிலை ஒருவர்க்கு வந்துவிடக் கூடாது என்று வலியுறுத்துவதற்காகவும் வந்துவிட்டால் அவர்கள் படும் துன்பங்களைப் படம் பிடித்துக் காட்டுவதற்காகவும் இரவச்சம் என்னும் அதிகாரம்.

 

கேட்காமலே சிலர் உதவுவர். அவர்களிடமும் வாய்விட்டு உதவி கேட்காமலே தாமே முயன்று வறுமையில் இருந்து வெளியே வருவது கோடி மடங்கு நன்மை தரும்.

 

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும். – 1061; - இரவு அச்சம்

 

கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் = கேட்காமலேயே தாமே மனம் உவந்து பிறர்க்கு உதவும் கண் போன்றவர்களிடமும்; இரவாமை கோடி உறும் = கை ஏந்தி உதவி கேட்காமல் தாமே முயன்று வறுமையைவிட்டு வெளியே வருவது கோடி நன்மையைத் தரும்.

 

கேட்காமலேயே தாமே மனம் உவந்து பிறர்க்கு உதவும் கண் போன்றவர்களிடமும் கை ஏந்தி உதவி கேட்காமல் தாமே முயன்று வறுமையைவிட்டு வெளியே வருவது கோடி நன்மையைத் தரும்.

 

வாய்ப்பு இருக்கிறதே என்று வறுமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது.

 

நம்மாளு: ஐயா, பிழைக்கவே வழி இல்லை என்றால் ஒருவன் என்ன செய்வது?

 

ஆசிரியர்: நல்ல கேள்வி. வறுமையைத் தாமே போராடி ஒழிக்க இந்த உலகில் வாய்ப்புகளும் இருக்க வேண்டும். அப்படி வாய்ப்புகள் இல்லாது போனால், இரந்துதான் உயிர் வாழும் நிலை சிலருக்கு வருமானால்

இந்த உலகம் உருவாக முதலாக இருந்த இயற்கை, இறை அவை அனைத்தும் பரந்து கெடுக என்று கடிகிறார் நம் பேராசான்.

 

இயற்கையும் இறையும் முற்றும் முழுதாகக் கெட்டிருந்தால்தான் அந்த நிலை வரும். அது வரை வெறுங்கை என்பது மூடத்தனம்.

 

இந்தக் குறளை நாம் முன்னர் சிந்தித்துள்ளோம். காண்க 18/01/2022. மீள்பார்வைக்காக:

 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான். - 1062; - இரவு அச்சம்

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page