26/09/2022 (575)
அவனின் கண்களுக்குள் ஒரு நெருக்கடி ஏற்படுவதுபோல உணர்கிறான்.
கதிராளி தசையின்(iris) மையப்பகுதியில் ஓளி ஊடுருவ இருக்கும் ஒரு சிறு கரு வட்டம்தான் கண்ணின் பாவை (Pupil). இதன் வழியாகத்தான் நாம் பார்க்கும் அனைத்தும் நம் புலன்களுக்கு தென்படுகிறது.
எப்போதும் அவளையே காண்பதற்கு அந்த இடத்தில் அவளை நிறுத்தவேண்டுமாம் அவனுக்கு! அதனால், அந்த கருமணியின் பாவையை கேட்கிறான்.
நீ எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாய். அதில் தவறு ஒன்றும் இல்லை. அதனால், நீ என் கண்ணைவிட்டு வெளியே சென்று உனக்கு வேண்டியதெல்லாம் பார்த்துக்கொள்.
எனக்கோ அவளை மட்டும்தான் காண வேண்டும். நான் காதலில் வீழ்ந்த திருநுதலாளை உன்னுடைய இடத்தில் இருத்திக் கொள்கிறேன். உங்கள் இருவரையும் ஒரு சேர இருத்திக்கொள்ள இடமில்லை.
ஆகையால் நீ கிளம்பு ப்ளீஸ்.
“கருமணியின் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.” --- குறள் 1123; அதிகாரம் – காதற் சிறப்பு உரைத்தல்
கருமணியின் பாவையே நீ கொஞ்சம் வெளியே போ; நீ வெளியே போகவில்லை என்றால், என்னால் விரும்பப்படும், அழகிய நெற்றியை உடையவளுக்கு இடம் இல்லாமல் போகின்றது.
கருமணியின் பாவாய் நீ போதாய் = கருமணியின் பாவையே நீ கொஞ்சம் வெளியே போ;
யாம் வீழும்திருநுதற்கு இல்லை இடம் = (நீ வெளியே போகவில்லை என்றால்) என்னால் விரும்பப்படும் அழகிய நெற்றியை உடையவளுக்கு இடம் இல்லாமல் போகின்றது.
திருப்பாவையில் பதிமூன்றாவது பாசுரம்:
“புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.” --- திருப்பாவை 13; ஆண்டாள் நாச்சியார்
“புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்” என்று ஆண்டாளை அவளின் தோழிகள் அழைப்பது போல ஒரு தொடர் இருப்பதைக் கவனிக்கலாம்.
உலகமே எழுந்துவிட்டது. ஆனால், ஆண்டாள் மட்டும் எழவில்லை. ஆண்டாளின் கண்களுக்குள் அவளின் காதலனாகிய அரியை அதாவது கண்ணனை, கண்ணின் பாவை இருக்கவேண்டிய இடத்தில் வைத்து கண்களை மூடி உறங்குவதுபோல நடித்துக் கொண்டு இருக்கிறாளாம்!
‘போதரிக் கண்ணிணாய்’ என்பதற்கு பல அறிஞர் பெருமக்கள் ‘மலர் போன்ற கண்களை உடையவளே’ என்றும் பொருள் கண்டிருக்கிறார்கள்.
போதரியை “போது+அரி” என்று பிரித்து, ‘போது’ என்பதற்கு மலர்கள் மலரும் ‘போது/பொழுது’ என்றும், ‘அரி’ என்பதற்கு வண்டு என்றும், அவளின் கண்கள் மலரும் போது வண்டுகள் மொய்ப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று விளக்கம் தருகிறார்கள். அதனால் ‘மலர் போன்ற கண்களை உடையவளே’ என்றும் பொருள் காண்கிறார்கள்.
அவள்தான் விழிக்கவேயில்லையே!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments