top of page
Search

கல்லாதான் சொற்கா முறுதன் ... 402, 23/04/2024

23/04/2024 (1144)

அன்பிற்கினியவர்களுக்கு:

நேற்று, கல்லாமையை விளங்கிக் கொள்ளும் பொழுது, வட்டு எறிதல் (Discus throw)  என்ற விளையாட்டையும் பார்த்தோம்.

 

வட்டு எறிதல் என்பது ஒரு பண்டைய கால விளையாட்டு. இதன் காலம் கி.மு. 708 ஆக இருக்கலாம் என்கிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளின் முன்னோடியாக கிரேக்கத்திலிருந்த பென்டத்லான் (Pentathlon)  என்ற ஐந்து போட்டிகளில் ஒன்றாக வட்டு எறிதல் (Discus throw) இருந்துள்ளது. ஏனைய நான்கு விளையாட்டுகள்: நீளம் தாண்டுதல் (long jump), ஈட்டி எறிதல் (javelin throw), குறுகிய ஓட்டப் பந்தயம் (stadion) மற்றும் மல்யுத்தம் (wrestling).

 

நம் பேராசானின் காலத்தைக் குறிக்க 401 ஆவது குறளும் பயன்படலாம்!

இது நிற்க.

 

பாலூட்டிகளுக்கு  (mammal) இருக்கும் பண்பமைப்புகள் மனித இனத்திலும் காணப்படுகின்றன. எனவே, மனித இனமும் பாலூட்டிகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

 

பாலூட்டிகளின் இரு சிறப்பம்சங்கள்: தாய்- சேய் இணைப்புத் திசு (Maternal Connective Tissue - MCT) மற்றும்  பால் சுரப்பிகள் (Mammary glands).

இணைப்புத் திசு நம் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், பால் சுரப்பிகள் கண்ணுக்குத் தெரியும். அதனைக் கொண்டு தாய்மை நிலை அடையும் அமைப்பை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். அதே போன்று, அந்தச் சுரப்பிகளே இல்லையென்றால் தாய்மை சாத்தியமாக வாய்ப்பு இல்லை என்றும் அறியலாம்.

 

சரி, இதெல்லாம் எதற்காக என்கீறீர்களா? காரணம் நம் பேராசான்தான்!

 

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று. – 402; - கல்லாமை

 

காமம் = ஆசை, விருப்பம்;

 

முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்று அற்று = பால் சுரப்பிகள் இல்லாத ஒருவள் தாய்மை நிலையை அடைய விரும்புவது எப்படிச் சாத்தியமற்றதோ, அப்படித்தான்; கல்லாதான் சொல் காமுறுதல் =  சிறந்த நூல்களைக் கற்காத ஒருவன் கற்றறிந்தோர் அவையைத் தன் கருத்துகளால் வெல்ல விரும்புதல்.

 

பால் சுரப்பிகள் இல்லாத ஒருவள் தாய்மை நிலையை அடைய விரும்புவது எப்படிச் சாத்தியமற்றதோ, அப்படித்தான், சிறந்த நூல்களைக் கற்காத ஒருவன் கற்றறிந்தோர் அவையைத் தன் கருத்துகளால் வெல்ல விரும்புதல்.

 

அறிவுச் சுரப்பிகள் எப்போதும் சுரக்க வேண்டும் என்றால் நல்ல நூல்களை நாளும் கற்க வேண்டும்.

 

போராளி பகத் சிங்கை இன்னும் சில மணித் துளிகளில் தூக்கிலிடப் போகிறார்கள் …

அப்போது, அவரிடம் உங்களின் இறுதி ஆசை ஏதும் இருக்கிறதா என்று வினவுகிறாள். அதற்கு. “ஆம், நான் புரட்சியாளர் லெனின் அவர்களின் நினைவூட்டல்கள் (Reminiscences of Lenin by Clara Zetkin) என்னும் இந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டுள்ளேன், அதை நான் படித்து முடிக்க வேண்டும்.” என்றார்.

 

அறிஞர் அண்ணா அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்துவிட்டார்கள். அறுவை சிகிச்சைக்கு மட்டுமா? அவர் இறுதிப் பயணத்திற்கும் சேர்த்தல்லவா அந்த நாள் அமைந்தது.

 

அண்ணாவிடம் சென்று மருத்துவக் குழு நாளை காலை உங்களுக்கு அறுவை சிக்கிச்சை செய்ய வேண்டும் தள்ளிப் போட முடியாது என்கிறார்கள்.

 

அதற்கு, அண்ணா நான் இப்பொழுது மேரி கரோலியின் ‘த மாஸ்டர் கிறிஸ்டியன்‘ (The Master Christian – Marie Corelli) என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்; நாளைக்குள் முடித்து விடுவேன்; அதன் பிறகு நீங்கள் உங்களின் முயற்சியைத் தொடரலாம் என்றார். படித்து முடித்தாரா அண்ணா?

 

சாகும் வரை கல்வி என்பது புகழுலகில் சாகா வரம் பெற ஓர் வழி!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page