03/01/2024 (1033)
அன்பிற்கினியவர்களுக்கு:
களவின் மேல் காதல் கொண்டால், அதுவும் அது முற்றிய காதலானால் வீயா விழுமம் தரும் என்கிறார். வீயா என்றால் நீங்கா; விழுமம் என்றால் துன்பம்.
களவெடுக்கும்போது உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி (excitement, thrill) ஏற்படுமாம்.
அதற்கும் ஒருவர் அடிமையாகலாமாம். அதற்குப் பெயர் கிளப்டோமேனியா (Kleptomania) என்கிறார்கள்.
இல்லையென்றால் பெரும் பணக்காரர்கள்கூட சிறு திருட்டுகளைச் செய்வார்களா? அவர்கள்தாம் கடைகளில் திருடுவதை (shop lifting) அதிகம் செய்வதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கார்டியன் (The Guardian) நாளிதழ், 2019 இல் வெளியிட்ட ஒரு செய்தியில் இத் திருட்டுகள் நிகழ காரணங்கள் என்னவென்பதை இவ்வாறு விளக்குகிறது:
… குறைந்த வருமானம் உடையவர்கள் தங்கள் சமூகங்களில் அதிக ஈடுபாடு உடையவர்களாக இருப்பதாலும், மேலும் கடைகளில் திருடும் போது பகிரங்கமாக அவமானப்படுத்தப்படுவார்கள் என்ற பயத்தாலும் ஏமாற்றுவதற்கும் திருடுவதற்கும் வாய்ப்பு குறைவு. மாறாக, பணக்காரர்களுக்குத் திருடினால் யார் நம்மைக் கேட்க முடியும் என்ற எண்ணமும், சுயநலமும் உள்ளன. இது அவர்களின் தார்மீக திசைகாட்டியைச் சீர்குலைக்கிறது. ஏழைகளுக்கு அதிகாரப் பிரமுகர்கள் மீது அதிக பயம் உள்ளது. ஆனால், பணக்காரர்களுக்கு அது இல்லை…
இது நிற்க. நாம் குறளுக்கு வருவோம். களவினால் வீயா விழுமம், அஃதாவது நீங்காத் துன்பம், தரும் என்கிறார். எப்போது தரும்? பதில்: பிடிபடும்போது ஒன்று; அதன் தாக்கம் எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது மற்றொன்று.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும். – 284; - கள்ளாமை
களவின்கண் கன்றிய காதல் = களவெடுப்பதில் இன்பம் கண்டு அதனில் ஈடுபாடு அதிகரித்தால்; விளைவின்கண் வீயா விழுமம் தரும் = அது ஏற்படுத்தப் போகும் விளைவுகளினால் நீங்காத் துன்பம் நிச்சயம்.
களவெடுப்பதில் இன்பம் கண்டு அதனில் ஈடுபாடு அதிகரித்தால், அது ஏற்படுத்தப் போகும் விளைவுகளினால் நீங்காத் துன்பம் நிச்சயம்.
இந்த அதிகாரத்தின் முடிவுரையாக ஒரு முக்கியமான குறளைப் பார்க்க வேண்டும்.
உயிர் நிலை கொள்வது இந்த உடம்பில் என்பது நமக்குத் தெரியும்.
உடலால் அழியின் உயிரால் அழிவர் என்கிறார் திருமூலப் பெருமான்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த் தேனே. --- பாடல் 724; மூன்றாம் தந்திரம்; திருமந்திரம்
உடலால் அழிவது என்பது எவ்வாறு? என்ற வினாவிற்கு விடையாக நம் பேராசான் ஒரு குறிப்பினைக் கள்ளாமையின் முடிவுரையாக வைத்துள்ளார்.
வேறு ஒன்றுமில்லை. கள்ளத்தனம் மனத்தில் புகுந்து கொண்டால் உடம்பார் அழிவர் என்கிறார். உடம்பார் அழியத் தொடங்கினால் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார். எனவே, உடம்பை வளர்க்கும் உபாயம் கள்ளாமையில் உள்ளது.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு. – 290; - கள்ளாமை
புத்தேள் உலகம் = தேவர் உலகம், எதிர்வரும் புதிய உலகம்
கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும் = கள்ள மனம் கொண்டவர்களின் உடலில் உயிர் நிலை கொள்ளாது. உடம்பார் அழிவார்கள். உயிர் பிரியும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது = கள்ள மனம் இல்லாரை எதிர்வரும் காலங்களில் உருவாகும் புதிய உலகமும் அவர்களின் நினைவைத் தள்ளாது. எந்நாளும் போற்றும்.
கள்ள மனம் கொண்டவர்களின் உடலில் உயிரானது நிலை கொள்ளாது. உடம்பார் அழிவார்கள். உயிர் பிரியும். கள்ள மனம் இல்லாரை எதிர்வரும் காலங்களில் உருவாகும் புதிய உலகமும் அவர்களின் நினைவைத் தள்ளாது. எந்நாளும் போற்றும்.
சரி, உடலால் அழிவது எங்ஙனம் என்று சொன்னாரே, உடலால் வாழ்வது எவ்வாறு என்று சொன்னாரா என்றால் இரு குறள்களில் சொல்லியிருக்கிறார். நாமும் அவற்றைச் சிந்திருக்கிறோம். உயிர்நிலை என்று மூன்று குறள்களில் பயன்படுத்தியுள்ளார்.
நம் பேராசானை என்ன நினைத்தீர்கள். எழுத்தெண்ணி அமைந்ததுதான் நம் திருக்குறள்.
இல்லறவியிலில் ஒரு குறள்; துறவறவியலில் ஒரு குறள்! அஃதாவது, அன்பை வளர்க்க ஒரு குறள்; அருளை வளர்க்க ஒரு குறள்!
காண்க 13/03/2021, 16/12/2023. மீள்பார்வைக்காக:
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. – குறள் 80; அன்புடைமை, இல்லறவியல்
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. – 255; - புலால் மறுத்தல், துறவறவியல்
இல்லறத்தில் அன்பாக இருங்கள். உங்கள் உயிரின் பயன் வளரும்.
துறவற நிலையில் அருளோடு இருங்கள். உயிரின் பயன் நிலைக்கும்.
கள்ள மனத்தை விட்டொழியுங்கள். உங்களுக்கு எப்போதும் அழிவில்லை. அவ்வளவே நம் ஆசான் காட்டும் வழி.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments