top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

களித்தானைக் காரணம் ... 929

28/06/2022 (487)

சிலர் நினைப்பாங்க, போதையில் இருப்பவனை, அதன் கொடுமைகளைச் சொல்லி திருத்திடலாம் என்று! அவர்களுக்காக ஒரு குறளை அமைத்துள்ளார் நம் பேராசான்.


சில நல்ல பெண் பிள்ளைகள் காதல் செய்யும். எதைப் பார்த்து என்றால் அவன் செய்யும் அட்டகாசங்களைப் பார்த்து (Anti-Heros). உதாரணம் – இன்றைய திரைப்படங்கள். அதாங்க, சினிமாக்கள். நீங்க பார்த்தீங்க என்றால், அதில் வரும் பெண் (heroine), நன்றாகப் படித்து, வேலைக்குச் சென்று கொண்டிருப்பாள்.


நம்ம ஆளு, அதாங்க Hero, கல்லூரியில் கலாட்டா பண்ணுவார்; தண்ணி அடிப்பார்; ஊர் சுற்றுவார்; பல வம்புகளுக்குப் போவார்; வேலைக்குப் போக மாட்டார். ஆனால், அவர் எப்பவும் நியாயத்துக்காகப் போராடுவார்!

அவர் மேல் அந்தப் பெண் ஈர்க்கப் படுவாள். அவனைத் திருத்தி நல் வாழ்க்கை ஒன்றைத் தனக்கு அமைத்துக் கொள்வேன் என்று உறுதி கொண்டு, அவனைத் திருத்த பல வழியிலும் முயற்சி செய்வாள். கல்யாணம் நடக்கும். கதை முடிஞ்சிடும்.


அவ கதையும் முடிஞ்சுதா? நமக்குத் தெரியாது. அதைக் காட்ட மாட்டாங்க!

இது போன்ற நிகழ்வுகள், நிஜ வாழ்க்கையிலும் நடந்து கொண்டுள்ளது. இது நிற்க.


பொருள் ஒன்று பெரிய தண்ணீர் தொட்டியில் விழுந்துடுது. தண்ணிர் தெளிவாக இல்லை. அதனாலே, அந்தப் பொருள் கண்ணுக்குத் தெரியலை. அதை நான் தேடி எடுக்கப் போகிறேன் என்று ஒருவர் இறங்குகிறார். மேலும், தண்ணிர் கலங்குது. உள்ளே ஒன்றும் தெரியலை.


சரின்னு மேல வந்து என்ன செய்கிறார் என்றால், ஒரு நீண்ட குச்சியை எடுக்கிறார்; அதன் நுனியில் துணியைச் சுற்றுகிறார்; கொஞ்சம் எண்ணெயை உற்றுகிறார்; அதைப் பற்ற வைக்கிறார். அதை எடுத்துக் கொண்டு தண்ணீரில் இறங்கி, அது தரும் வெளிச்சத்தைக் கொண்டு, அந்தப் பொருளை எடுப்பேன் என்கிறார்!


இது என்ன கூத்துன்னுதானே நினைக்கறீங்க? அது எப்படி முடியும்? தண்ணீர் தொட்டியில் மூழ்கியிருப்பதை எப்படி தீப்பந்தம் கொண்டு தேட முடியும்ன்னு நீங்க கேட்பது எனக்குப் புரியுது.


அதையேதான் நம்ம பேராசானும் சொல்கிறார். கள்ளில் மூழ்கிக் கிடப்பவனை காரணங்கள் சொல்லித் திருத்த முயல்வதும், தண்ணீர் தொட்டியில் மூழ்கியிருக்கும் பொருளைத் தீப்பந்தம் கொண்டு மீட்பதும் ஒன்றுதான் என் கிறார்.


களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.” --- குறள் 929; அதிகாரம் – கள்ளுண்ணாமை


களித்தானைக் காரணம் காட்டுதல் = போதையில் இருப்பவனுக்கு அதன் தீமைகளைச் சொல்லி அதில் இருந்து விலகி இருக்கும்படி சொல்வது;

துரீ = தேடுவது; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று = நீருக்கு அடியில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடிக் கண்டு பிடித்து மீட்பேன் என்பது.


போதையில் இருப்பவனுக்கு அதன் தீமைகளைச் சொல்லி அதில் இருந்து விலகி இருக்கும்படி சொல்வது எது போன்றது என்றால் நீருக்கு அடியில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடிக் கண்டு பிடித்து மீட்பேன் என்பதைப் போல் உள்ளது. அது இயலாது.


தண்ணீர் தொட்டியாக இருப்பனைத் தண்ணீ தெளிச்சு விட வேண்டியதுதானா?


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




3 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page