25/01/2024 (1055)
அன்பிற்கினியவர்களுக்கு:
கருவினைக் காக்க முட்டை ஓடு தோன்றுகிறது. அந்தக் கருவைப் பாதுகாக்கிறது. கருவானது முட்டை ஓட்டுடன் ஒட்டிக் கொண்டே இருக்கின்றது. கரு வளர வளர அது கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறது. தக்க சமயம் வரும்போது, அது அந்த முட்டை ஓட்டையே உடைத்துக் கொண்டு பறந்து செல்கிறது.
அது உடைத்து வெளியே செல்லும்வரை, அந்த முட்டை ஓட்டினுள் நடக்கும் மாற்றங்ககளை நம்மால் பார்க்க இயலாது. எப்போதும் இருப்பது போலவே இருக்கும். அடுத்த நிமிடம் அந்த முட்டையிலிருந்து அந்தப் பறவை பிரிந்து பறந்துவிடும்.
அதுபோலத்தான் நம் வாழ்வும். உள்ளே நம்முடன் உயிர் ஒட்டிக் கொண்டுள்ளது போலத்தான் தோன்றும். ஆனால், அது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலைவிட்டுப் பிரிந்து கொண்டிருக்கும். ஒரு நாள் இந்த உடலை விட்டுப் பறந்துவிடும். இதனை உணர்க என்கிறார்.
இதனை இளைஞர்களுக்குச் சொல்கிறாரா என்றால் இல்லை! இல்லறம் முடித்துத் துறவறத்தில் ஓய்வு நோக்கி இருப்பவர்களுக்குச் சொல்கிறார்.
இளையவர்களும் தெரிந்து வைத்துக்கொள்ளலாம். தவறில்லை.
எல்லாக் குறளும் எல்லார்க்குமானவை அல்ல. அவர் அவர் இருக்கும் நிலைகளுக்கு ஏற்றவாறு குறள்களைப் பற்ற வேண்டும்.
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு. – 338; - நிலையாமை
குடம்பை = முட்டை ஓடு. இங்கே நம் உடல்; புள் = பறவை. இங்கே நம் உயிர்;
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே = எப்படி முட்டை ஓட்டை ஒரு நாள் அதனுள் இருக்கும் பறவை உடைத்துக் கொண்டு அதனிலிருந்து பிரிந்து பறந்து செல்கிறதோ; உடம்பொடு உயிரிடை நட்பு = அது போலத்தான், இந்த உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு நிரந்தரமில்லாதது. நம் உயிரும் உடலைவிட்டு ஒரு நாள் பிரியும் என்பது திண்ணம்.
எப்படி முட்டை ஓட்டை ஒரு நாள் அதனுள் இருக்கும் பறவை உடைத்துக் கொண்டு அதனிலிருந்து பிரிந்து பறந்து செல்கிறதோ, அது போலத்தான், இந்த உடலுக்கும் உயிருக்குமான தொடர்பும் நிரந்தரமில்லாதது. நம் உயிரும் உடலைவிட்டு ஒரு நாள் பிரியும் என்பது திண்ணம்.
நம்மாளு: என்ன ஐயா, நம்ம ஐயன் ரொம்பத்தான் மரணபயத்தை உண்டு பண்றாரு?
ஆசிரியர்: மரணம் என்பது எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு நாளும் பயின்று கொண்டுதான் இருக்கிறோம். தினமும் உறங்கி மீண்டும் விழிக்கிறோம். அதே போல, இந்த உலகில் இறப்பும் பிறப்பும் இயல்பே! எனவே, நிலையாமையை மனத்தில் கொள்ள வேண்டும்.
உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. – 339; - நிலையாமை
சாக்காடு உறங்குவது போலும் = மீளாத் துயில் என்பது தினம் இரவில் வரும் துயில் போலத்தான்; உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு = தினமும் இரவு துயின்று காலையில் எழுவது போலத்தான் பிறப்புமாம்.
மீளாத் துயில் என்பது தினம் இரவில் வரும் துயில் போலத்தான். தினமும் இரவு துயின்று காலையில் எழுவது போலத்தான் பிறப்புமாம். அவ்வளவு இயல்பானது இறப்பும், பிறப்பும்! அஃதாவது, உறங்குவதும் மீண்டும் எழுவதும் உடலுக்கு இயல்பு. அதுபோலச் சாக்காடும், பிறப்பும் இந்த உலகிற்கு அவ்வளவு இயல்பானது. தோன்றிய பொருள்களுக்கு நிலையாமை என்னும் பண்புதான் நிலைத்த தன்மையுடைத்து என்கிறார்.
பிறந்துவிட்டால் இங்கேயே நிலைத்து இருப்போம் என்பது அறியாமை. மீளாத் துயில் கொள்ளும்முன், அஃதாவது, நாச்செற்று விக்குள்மேல் வாராமுன், நல்வினை மேற்சென்று செய்ய வேண்டும் என்றார் குறள் 335 இல். காண்க 23/01/2024.
அடுத்து முடிவுரையாக ஒரு குறளை சொல்ல வேண்டும் என நினைத்தவர் ஓர் ஏகடியமான கேள்வியை முன் வைக்கிறார். அதன் மூலம் உயிரின் நிலையாமையை நிறுவுகிறார்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments