கெடுங்காலைக் கைவிடுவார் ... குறள் 799
02/12/2021 (282)
நினைத்தாலே கொதிக்குது.
எப்போ?
போகும் சமயத்திலே.
எங்கே போகும் சமயத்திலே?
மேலூருக்கு (heavenly abode) போகும் சமயத்திலும்.
எதனால்?
முன்பொரு சமயம் (அது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம்), நண்பன் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒருவன் தக்க சமயத்தில் கைவிட்டு விட்டான் என்று நினைக்கும் போது என் நெஞ்சு சுடுகிறது. தாங்க முடியலை. இப்படி அவன் கைவிட்டான் என்று நினைக்கும் போது!
இன்னும் சில நொடிதான் வாழ்க்கை என்றாலும், அந்தச் சமயத்திலும் உறுத்துமாம்.
‘உள்ளினும் உள்ளம் சுடும்’ – என்கிறார் நம் பேராசான்.
யாருக்கு சொல்கிறார்?
நமக்குதான் சொல்கிறார்.
ஏன் சொல்கிறார்?
“யாரையும் நம்ப வைத்து கழுத்தை அறுக்காதீங்க”. அது பெரிய தப்பு. அதை செய்யாதீங்க. செய்தால் அதனால் பாதிக்கப்பட்டவர் தான் போகும் போதும் வருந்துவார். அது நல்லதில்லை என்கிறார்.
“கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.” --- குறள் 799; அதிகாரம் – நட்பாராய்தல்
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை = ஒருவனை கேடு சூழ்ந்து இருக்கும்போது அவனை கைவிடுவாரின் நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் = தன் கடைசிக் காலத்தில் நினைத்தாலும் உள்ளம் கொதிக்கும்.
நட்பு என்றால் எப்படி இருக்கனும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கார். நமக்கு மிகவும் பரிச்சையமானக் குறள்தான். நாளை பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
