வேண்டாம் வெட்டி பந்தா
தொழு நோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லம் ஒன்று உருவாக்கனுங்கறது அவரது எண்ணம். அதுக்கு அவர் உதவி கேட்டு பலரை அனுகறார். சிலர் அவங்களால முடிந்ததை தராங்க. சிலர் மறுக்கறாங்க.
ஆனா, ஒரு பெரும் செல்வந்தர் அவங்க கையை நீட்டும் போது, அவங்க மேல இருந்த ஒரு மாற்றுக்கருத்தால், அவங்க கையிலே எச்சிலை துப்பிடறாரு. அவங்க முகத்திலே இருந்த அந்த சிரிப்பு மாறலை.
அவங்க அந்த கையை தன் நெஞ்சு கிட்டே வைத்து இது எனக்கு, நான் எடுத்துக்கிறேன். நன்றி. ஆனா, நீங்க அந்த ஆதரவற்றவர்களுக்கு உதவனும்னு சொல்லிட்டு மற்றோரு கையை நீட்றாங்க.
அந்த பெரும் தனக்காரர் ஆடிப் போயிடறாரு! அப்புறம் என்ன நடந்திருக்கும்? அவங்களுக்கு வெற்றி தான்!
இப்போ, அவங்களோட பெயர் எனக்கு தெரியுமேன்னு நீங்க சொல்வது எனக்கு கேட்குது. ஆமாங்க, அன்னை தெரசாவே தான் அந்த உயர்ந்த மனிதர்.
சரி, இப்போ எதுக்கு இங்கேன்னு கேட்கறீங்களா? நேற்று ‘மாண்பு இறந்த மானம்’ ஒரு குற்றம்னு பார்த்தோம் இல்லையா? அஃதாவது, தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு நல்லது பண்ணனும்னா ‘தன்மானம், பந்தா’ இதையெல்லாம் விட்டுடனுமாம். வெட்டியான மானத்தால தன் குடியை விட்டுடக்கூடாதாம். நான் சொல்லலைங்க. நம்ம பேராசான் சொல்கிறார் இன்னுமோர் குறளில் இப்படி:
“குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்.” ---குறள் 1028; அதிகாரம் - குடிசெயல்வகை
குடிசெய்வார்க்கு = தன் குடியை உயர்த்தனும்னு நினைப்பவர்களுக்கு; பருவம் இல்லை = ஒரே வெயிலா இருக்கு, குளிர் அடிக்குது, மழையா இருக்கு அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு; மடிசெய்து = சோம்பிக்கிடந்து; மானம் கருதக் = தேவையில்லாம வெட்டி பந்தாவை பார்த்தா; கெடும் = ஒன்னும் பயனில்லை
தன் குடியை உயர்த்தனும்னு நினைப்பவர்கள் ஒரே வெயிலா இருக்கு, குளிர் அடிக்குது, மழையா இருக்கு அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு சோம்பிக்கிடந்து தேவையில்லாம வெட்டி பந்தாவை பார்த்தா ஒன்னும் பயனில்லை.
சரியான காலம் இது தான் என்று நிச்சயமா தேர்ந்தெடுக்கனும். களமும் காலமும் நாம தான் முடிவு பண்ணனும்னு நம்ம ஆசிரியர் முன்னாடி சொன்னது நினைவிருக்கலாம்!
எளியதும் வலியதை வெல்லும்! குறள் இருக்கா கண்டுபிடின்னு சொல்லிட்டு நடையை கட்டினார் ஆசிரியர். தேடுவோம் வாங்க.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments