கேட்டினும் உண்டோர் உறுதி ... குறள் 796
18/12/2021 (298)
வழக்கறிய வல்லார் நட்பினை ஆய்ந்து கொள்ளவேண்டும் என்று குறள் 795ல் சொன்ன நம் பேராசான், மேலும் ஒரு குறள் சொல்கிறார் ஆராய்வதற்கு.
நட்பின் வரையறை சொல்லும் போது ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என்றார் குறள் 788ல்.
அங்கேயே ஒரு குறிப்பைக் கொடுத்துவிட்டார். நமக்கு ஒரு துன்பம் வரும்போது அதிலும் ஒரு நல்லது இருக்காம். அது என்னவென்றால், அதுதான் அவர்களின் நட்பெல்லைகளை அளக்கும் ஓர் கோலாம்.
பொதுவாக, வரும் சொல்லின் (வருமொழி) முதல் எழுத்து உயிர் மெய் எழுத்தாக இருப்பின் ஒரு என்று சொல்கிறார்கள். உதாரணம் ஒரு குடை, ஒரு பம்பரம்.
வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தில் இருந்தால் ஓர் என்பதைப் பயன்படுத்துகிறார்கள். ஓர் உலகம் என்பதுபோல.
இதைத்தான் ஆங்கிலத்தில் ‘a’ and ‘an’ என்று ,இடம் பார்த்து, எப்போதுமே பயன் படுத்துகிறார்கள். ஆனால், தமிழில் பொது, சிறப்பு என்று இரண்டு பயன்பாடுகள் இருக்கிறது.
ஒரு சொல் என்றால் a word என்று ஆங்கிலத்தில் பொருள்படும். அதே சமயம், ‘ஓர் சொல்’ என்றால் ஒப்பற்றச்சொல் என்று பொருள். இங்கே ‘the word’ என்று ஆங்கிலத்தில் பொருள்.
என்ன ஆச்சு என்றால், ஆங்கிலப் புரிதல் கொண்டு சிலர் மயக்கமுறுகிறார்கள். எப்படியென்றால் அடைஆறு (அடையாறு) ஆங்கிலத்தில் adyar ஆகி இப்போது ‘அடையார்’ ஆகிவிட்டதைப் போல.
இது நிற்க. நாம குறளுக்கு வருவோம்.
“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.” --- குறள் 796; அதிகாரம் – நட்பாராய்தல்
கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் = நட்புகளின் எல்லைகளை அளப்பதற்கு ஓர் அளக்கும் கோல்; கேட்டினும் உண்டோர் உறுதி = வந்த துண்பத்திலும் நமது அறிவு மேம்படும். நட்பைப் பர்றி ஆய்ந்து கொள்ளலாம். இது நிச்சயம், உறுதி.
(‘கோல்’ என்பது ஏகதேச உருவகம் என்கிறார்கள். இலக்கணம் அறிந்தவர்கள் விளக்கலாம்.)
ஆராய்வதால் இவர்கள்தான் நட்புக்கு உரியவர்கள் என்று சொன்ன நான்கு குறள்களையும் (793.794, 795 & 796) பார்த்துள்ளோம். மேலும் தொடரலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
