29/07/2022 (518)
நல்ல வெள்ளைத் துணியிலே ஒரு கருப்புக் கறை இருந்தா பளிச்சுன்னு தெரியும்.
நம்மாளு: அதான் தெரியுமே சார்!
அதே போல, ஒரு கறுப்புத் துணியிலே ஒரு வெள்ளைப் புள்ளி இருந்தால் அதுவும் பளிச்சுன்னு தெரியுமா?
நம்மாளு: அதுவும்தான் சார் தெரியும்.
அதாவது, ஒரு இடத்தின் இயல்புக்கு மாறுபட்டு ஒன்று இருந்தால், எதுவாக இருந்தாலும் பளிச்சுன்னு கண்ணிலே படும்.
ஒரு நல்ல வழியில், குலத்தில் ஒருத்தன் இருந்தால் அவனின் செயல்கள் கவனிக்கப் படும். எப்போது? அவன் அக்குல நெறிக்கு விலகி செயல்கள் செய்தால் அது பெரிதும் கவனிக்கப் படும்.
“You too, Brutus?” என்பதைப் போல. சீசரின் நண்பனே அவனைக் கொல்ல வரும்போது சீசர் உதிர்க்கும் கடைசி வார்த்தைகள் அவை.
நல்ல முழுமதி நாள். வானத்தில் சந்திரன் ரொம்பவே பிரகாசமாக இருக்கு. அப்போ, எதோ ஒரு நிகழ்வு நடக்க, அந்த சந்திரனில் ஒரு சிறிய கருமையான புள்ளி தோன்றினால், அதை எல்லோராலயும் பார்க்க முடியும். பார்ப்பார்கள், அது மறுநாள் நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாகவும் வரும்.
அந்த மாதிரி, ஒரு நல்ல குலத்தில் பயணிக்கும் ஒருவன் செய்யும் கீழானச் செயல்கள் சட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். எனவே, கவனமாக இருக்கனும் என்கிறார்.
“குடிபிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.” --- குறள் 957; அதிகாரம் – குடிமை
குடிபிறந்தார் கண் விளங்கும் குற்றம் = நல்ல குடியில் பயணிப்பவனிடம் தோன்றும் குற்றங்கள்;
விசும்பின்(ல்) = வானத்தில்; மதிக்கண் = சந்திரனிடம்; மறுப்போல் = ஒரு கறை போல; உயர்ந்து விளங்கும் = பளிச்சுன்னு தெரியும்
நல்ல குடியில் பயணிப்பவனிடம் தோன்றும் குற்றங்கள், வானத்தில் உள்ள சந்திரனில் ஒரு குறை ஏற்பட்டால் எப்படி இந்த உலகம் முழுமைக்கும் உடனே தெரிய வருமோ அது போல தெரியவரும். இது நிற்க.
எல்லா நாளும் ஒரு போலத்தான் இருக்கு. இருந்தாலும் சில நாட்கள், சிலருக்கு முக்கியமான நாட்களாக அமைந்துடுது. உதாரணத்திற்கு பிறந்த நாள், திருமணநாள் போன்றவை. அன்றைக்கு அவர்கள் செய்யும் சிறு, சிறு பிழைகள் மன்னிக்கப்படுகின்றன.
சரி, இது எதற்கு இப்போன்னு கேட்கறீங்க?
எப்படித்தான் என் பிறந்த நாள் இன்றைக்குன்னு சொல்றது! மற்றது உங்க விருப்பம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Commenti