top of page
Search

குடிபுறம் கொலையில் ... 549, 550

05/01/2023 (672)

இதுகாறும் இன்சொல், காட்சிக்கு எளியன் என்று சொல்லிவந்த நம் பேராசானுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது.


நம் பேச்சைக் கேட்டு, எல்லா நிகழ்வுகளிலும், இவர்கள் இப்படியே இருந்துவிட்டால்?


குற்றங்களைக் களைய, கடிய கடுஞ்சொல் தேவைப்படும், கண்டிக்கும் உறுதி வேண்டும் என்று எண்ணிய நம் பேராசான் செங்கோன்மை அதிகாரத்தின் இறுதி இரண்டு பாடல்களை அவ்வாறு அமைக்கிறார்.


குடிகளைக் காப்பது முக்கியம் என்றால், குடிகளுக்குள்ளே களைகள் போலே சிலர் குழப்பங்களை விளைவிக்கலாம், குற்றச் செயல்களில் ஈடுபடலாம். அதனால், குற்றம் கடிதல் தவறு இல்லை. அதுவும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அது மிகவும் முக்கியம் என்கிறார்.


குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுஅன்று வேந்தன் தொழில்.” --- குறள் 549; அதிகாரம் – செங்கோன்மை


குடி = குடிகளை; புறம் காத்து = பிறர் வருத்தாமல் காத்து; பிறர் = பகைவர், கள்வர், சுற்றத்தார் முதலானவர்கள்; குற்றம் கடிதல் = அதே சமயம், குடிகளே குற்றம் இழைக்கும் போது கண்டித்துத் திருத்துதல்; வடு அன்று = பழி வரும் என்று நினைக்க வேண்டாம்; வேந்தன் தொழில் = அதுதான், ஒரு தலைமையின் கடமை.


குடிகளை பிறர் வருத்தாமல் காத்து, அதே சமயம், குடிகளே குற்றம் இழைக்கும் போது கண்டித்துத் திருத்தினால் பழி வரும் என்று நினைக்க வேண்டாம். அதுதான், ஒரு தலைமையின் கடமை.


குற்றம் களைதல் தலைமையின் கடமை என்கிறார்.


குற்றம் கடியலாம் என்று சொல்லிவிட்ட நம் பேராசானுக்குத் திருப்தி இல்லை. குற்றம் கடிதல் என்பது எதுவரை செல்லலாம் என்பதை வரையறுக்கிறார். அதாவது, குற்றம் செய்பவர்களை போட்டுத் தள்ளினாலும் பரவாயில்லை என்கிறார். அதாவது, கொலையும் செய்யலாம் என்கிறார்.


கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்

களை கட்டதனோடு நேர்.” --- குறள் 550; அதிகாரம் – செங்கோன்மை


பைங்கூழ் = பசுமையான இளம் பயிர்களிடையே; களை கட்டதனோடு நேர் = முளைத்துவிட்டக் களைகளை (cut) வெட்டி, பிடுங்கி எரிவது போல; கொடியாரை = கொடியவர்களை; கொலையில் = கொல்வதும்; வேந்து ஒறுத்தல் = தலைமை தரும் தண்டனைகளுள் ஒன்றாக இருக்கலாம், தவறில்லை.


பசுமையான இளம் பயிர்களிடையே, முளைத்துவிட்டக் களைகளை வெட்டி, பிடுங்கி எரிவது போல; கொடியவர்களைக் கொல்வதும் தலைமை தரும் தண்டனைகளுள் ஒன்றாக இருக்கலாம், தவறில்லை.


நம் பேராசான், கொலை செய்வது தவறு என்ற கருத்துடையவர் என்பது நமக்குத் தெரியும். எப்படி? அதுதான், “கொல்லாமை” என்ற அதிகாரத்தையே வைத்துள்ளாரே!


அதனால்தான், அவ்வளவு பீடிகைகளோடு சொல்கிறார். பிற வழிகளில் தண்டனைகள் தர வழி இருக்கும்போது அதனைப் பயன் படுத்த வேண்டும்.


நமது உச்சநீதி மன்றமும் (Supreme Court), கொலைத் தண்டனையை, அரிதிலும் அரிதான வழக்குகளில் (rarest of rare cases) மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.


மீண்டும் சந்திப்போம்.


நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Comentários


Post: Blog2_Post
bottom of page