top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கேடும் பெருக்கமும் இல்லல்ல ...

28/09/2023 (936)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

“இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் இதயம் ஒன்று தான் பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான் வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான் இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான் தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான் விழி இரண்டு இருந்த போதும் பார்வை ஒன்று தான் பார்வை ஒன்று தான் வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான் இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் உலகம் ஒன்று தான் ...” கவிஞர் ஆலங்குடி சோமு; திரைப்படம் – இரவும் பகலும் (1965); T R பாப்பா அவர்கள் இசையில்.


முத்தான பாடல்களைத் தந்த பெரும் கவிஞர் ஆலங்குடி சோமு. ஆண்டவன் உலகத்தின் முதலாளி (தொழிலாளி), கத்தியைத் தீட்டாதே (விளக்கேற்றியவள்), ஆடலுடன் பாடலைக் கேட்டு (குடியிருந்த கோயில்), தாயில்லாமல் நானில்லை (அடிமைப் பெண்) போன்ற 170க்கும் மேலான பாடல்களைத் தமிழ் திரை உலகிற்கு அளித்தவர்.


சரி, இன்றைக்கு ஏன் இந்த இரவும் வரும் பகலும் வரும் பாடல் என்று கேட்கிறீர்கள்? அதாங்க, நடுவுநிலைமை என்கிறார் நம் பேராசான்.


இந்த உலகத்தில் அழிவும் உண்டு ஆக்கமும் உண்டு; கேடும் உண்டு பெருக்கமும் உண்டு; அல்லதும் உண்டு, நல்லதும் உண்டு. இவை தொடர்ந்து வருவன. அதனால், நல்லது இனிமேல் நடக்கவே நடக்காதோ என்று நினைத்து நாம் நடுவுநிலைமையைவிட்டு பிறழமால் இருக்கணுமாம்.


கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.” --- குறள் 115; அதிகாரம் – நடுவுநிலைமை


கேடும் பெருக்கமும் இல் அல்ல = இந்த உலகில் கேடும் ஆக்கமும் மாறி மாறித் தோன்றாமல் இருக்காது; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி = கேடு நிலைத்துவிடுமோ, ஆக்கம் அகப்படாமலே போகுமோ என்று அஞ்சி மனத்தை வளைக்காமல் நடுவுநிலைமை பிறழாமல் இருப்பதுதான் உயர்ந்தவர்க்கு அழகாகும்.


இந்த உலகில் கேடும் ஆக்கமும் மாறி மாறித் தோன்றாமல் இருக்காது. கேடு நிலைத்துவிடுமோ, ஆக்கம் அகப்படாமலே போகுமோ என்று அஞ்சி மனத்தை வளைக்காமல் நடுவுநிலைமை பிறழாமல் இருப்பதுதான் உயர்ந்தவர்க்கு அழகாகும்.


பெருமை வரும்; சிறுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான், வாழ்க்கை ஒன்றுதான்!


ஆகையினால் மானிடரே நடுவுநிலைமையைக் கைக்கொள்வீர்!


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Yorumlar


Post: Blog2_Post
bottom of page