30/08/2022 (549)
கண்ணிலே விரலை விட்டு ஆட்றாங்கன்னு சொல்றாங்க இல்லையா அது போல நம் பேராசான் கண்ணை வைத்து பல ஆட்டம் போடுகிறார்.
அவள் கண்ணைப் பார்த்து அவன் கலங்குவது போல இருக்கும் குறள்கள் தகை அணங்கு உறுத்தல் (109ஆவது) அதிகாரத்திலே இருக்கு.
அவள், அவனைக் காணாமல் இருப்பதால், தன் கண்ணைத் தானே நொந்து கொள்வது போல அமைந்திருப்பது “கண் விதுப்பு அழிதல்” 118ஆவது அதிகாரம்!
ஒவ்வொன்றாக பார்ப்போம்.
ஆசிரியர்: தம்பி, ‘கோடு’ என்றால் என்ன பொருள்?
நம்மாளு: (மைண்ட் வாய்ஸ் – இன்னைக்கு நேரம் சரியில்லை) ஐயா, கோடுன்னா ஒரு பெண்சிலை வைத்து நீளமா இழுத்தால் அதான் கோடு. ‘இரு கோடுகள்’ன்னு ஒரு படம்கூட வந்திருக்குங்க ஐயா…
ஆசிரியர்: எதற்கெடுத்தாலும் திரைப்படம்தான்! சரி, சரி. கொல்லங்கோடு, திருச்செங்கோடுன்னு ஊர் பெயர்களில் ‘கோடு’ன்னு சேர்த்து எழுதுகிறார்களே, அதற்கு என்ன பொருள்?
நம்மாளு: ங்கே …
ஆசிரியர்: ‘கோடு’ என்றால் வளைந்த என்று பொருள். வளையாத கோடு என்பது நேர்கோடு. குன்றுகளும், மலைகளும் பார்வைக்கு கீழ் நோக்கி வளைந்திருக்கும். அதாவது, மேல் நோக்கி குவிந்திருக்கும். Convex என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அதான் அது.
மேட்டு நிலங்களை, பண்டை வழக்கத்தில், ‘கோடு’ என்ற அடைமொழியோடு பயன்படுத்தினார்கள். அதனால்தான், கொல்லங்கோடு, திருவிதாங்கோடு என்ற பெயர்கள்.
நம்மாளு: ஐயா… திருக்குறள், திருக்குறள் …
ஆசிரியர்: இதோ வருகிறேன்.
கண்ணிலே புருவம் இருக்கு இல்லையா, அது கண்ணை அளவுக்கு அதிகமாக விரிக்கும்போது மேலே போகும். பார்பதற்கு பயங்கரமாக இருக்கும். கோவம் வரும்போது கண் விரியும். தானாக புருவங்கள் மேலே போகும். காளி உருவங்கள் அவ்வாறுதான் இருக்கும். (காளி உருவத்திலும் ஒரு ரகசியம் இருக்கு. அதை பிறகு பார்க்கலாம்.)
அதுபோல, அவளது வளைந்த அந்த கொடும் புருவங்கள், வளையாமல் இருந்தால் எனக்கு ஒன்றும் துன்பமில்லை என்று அவன் சொல்வதுபோல அமைந்திருக்கிறது இந்தக் குறள்.
“கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல மன் இவள் கண்.” --- குறள் – 1086; அதிகாரம் – தமை அணங்கு உறுத்தல்
அஞர் என்றால் கொடுந்துயர் என்று பொருள்.
கொடும்புருவம் கோடா மறைப்பின் = அந்த கொடுமையான வளைந்த புருவங்களை வளைக்காமல் அவள் மறைத்தாளாயின்;
இவள் கண் நடுங்கு அஞர் செய்யல மன்= இவளின் கண் நடுக்கத்தைத் தரும் துயரத்தைச் செய்யாது ஒழித்துக் கட்டும்.
மன் என்பது ஒழியிசை எச்சம். ‘செய்யல மன்’ என்றால் செய்யாது ஒழித்துக் கட்டும்.
தமிழ் இலக்கணத்தில் ‘எச்சம்’ என்ற பகுதியை விரித்தால் விரியும். சமயம்வரின் விரிப்போம் என்று சொல்லிவிட்டு ஆசிரியர் நடையைக் கட்டினார்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்

Comments