18/04/2024 (1139)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஆவல் அதிகமாக, அதிகமாக அவளின் மனம், அவளின் உடலை விட்டுத் தாவி, மரத்தின் உச்சாணிக் கிளையில் ஏறி பார்ப்பதனைப் போல, அவனின் வரவை எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று குறள் 1264 இல் சொன்னாள்.
அவர் மட்டும் வந்து விடட்டும் என்று சொல்லி மேலும் தொடர்கிறாள்.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு. – 1265; - அவர்வயின் விதும்பல்
கொண்கன் = துணைவன், கணவன்;
கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் = என் கொண்கனை, அஃதாவது, என் நெஞ்சிற்கினியவரைக் கண்ணாரக் கண்டபின்;
நீங்கும் என் மென் தோள் பசப்பு = என்னைப் பீடித்திருக்கும் இந்தப் பசலை நோய் நீங்கி என் உடல் மீண்டும் பொலிவு பெறும்; காண்க = பார்க்கத்தானே போகிறீர்கள்; மன் – ஒழியிசை; மென் தோள் – ஆகு பெயர் - அவள் அழகிய உடலுக்கு ஆகி வந்துள்ளது.
என் கொண்கனை, அஃதாவது, என் நெஞ்சிற்கினியவரைக் கண்ணாரக் கண்டபின், என்னைப் பீடித்திருக்கும் இந்தப் பசலை நோய் நீங்கி என் உடல் மீண்டும் பொலிவு பெறும். பார்க்கத்தானே போகிறீர்கள்!
மேலும் தொடர்கிறாள்.
வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. – 1266, - அவர்வயின் விதும்பல்
பைதல் = துன்பம்;
கொண்கன் ஒரு நாள் பருகுவன் = என்னவர் ஒரு நாள் என்னைத் தழுவத்தானே போகிறார்; பைதல் நோய் எல்லாம் கெட = அத் தழுவலில் எனக்குத் துன்பம் தந்து கொண்டிருக்கும் எல்லா நோய்களும் பறந்தோடும்; வருக = அப்பொழுது வந்து பாருங்கள்; மன் – ஒழியிசை.
என்னவர் ஒரு நாள் என்னைத் தழுவத்தானே போகிறார். அத் தழுவலில் எனக்குத் துன்பம் தந்து கொண்டிருக்கும் எல்லா நோய்களும் பறந்தோடும். அப்பொழுது வந்து பாருங்கள்.
அப்பொழுது வந்து தொலைங்க (வருக மன்)! (நீங்க அப்பொழுது வந்தால்தான் என்ன? வரவிட்டால்தான் என்ன – இதுதான் அவள் மனத்தின் குரல்.) அதுவரைக்கும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்கிறாள்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments