top of page
Search

காணுங்கால் காணேன் ...1286, 1094

01/03/2022 (368)

‘எழுதுங்கால் கோல்காணாக் கண்’ என்று சொன்ன வள்ளுவப் பெருமானுக்கு அடுத்து ஒன்று தோன்றுகிறது. மை எழுதுவது தினமும் சில முறை மட்டும் நிகழ்வது. அதுவும் அருகில் இருக்கும் போது நிகழ்வது.


பொதுவாக ஒரு குறளை சொன்னால் என்னவென்று தோன்றுகிறது நம்பெருமானுக்கு. ஏற்கனவே நம் பேராசான், களவியலில் குறிப்பறிதல் (110ஆவது) அதிகாரத்தில் சொல்லியிருந்தக் குறளை நாம் பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 07/09/2021, 11/09/2021


யான்நோக்குங் காலை நிலன்நோக்கும், நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.” ---குறள் 1094; அதிகாரம் – குறிப்பறிதல்


இந்தக் குறளை அப்படியே மாற்றுகிறார்.


காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறு அல்லவை.” … குறள் 1286; அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்


தவறாய = தோழியிடம் சொல்லி, பிரித்து மேய்ந்த ‘அவரின்’ தவறுகள்; காணுங்கால் காணேன் = அவரைப் பார்த்த மாத்திரத்தில் கவனம் வருவதில்லை; காணாக்கால் காணேன் தவறு அல்லவை = அவர் என் அருகில் இல்லாதபோழ்து அவர் செய்யும் தவறுகளையன்றி வேறு எதுவும் எனக்குத் தெரிவதில்லை


என்ன ஒரு உளவியல் பார்வை பாருங்க. ‘அவள்’கள் வர்க்கம் பார்ப்பதும் தவிர்ப்பதும் ஆடவர்களின் ‘தவறுகள்’தான்!


இதை, ஆடவர்களுக்கு ஒரு குறிப்பாக காட்டுகிறார்.


தப்பிக்கனும் என்றால் அருகில் இருங்கள். முடியலையா, தொடர்பு எல்லையில்லாவது இருங்கள். வேறு தொடர்பு எல்லைக்குள் எப்போதும் போய்விடாதீர்கள்!


அருகில் இருப்பதுபோல் நடித்தால் ஏமாந்து விடுவார்கள் என்பதற்கு ஒரு அன்மைச் செய்தி (13/02/2022). இது ‘அவள்’கள் வர்க்கத்திற்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே ஒரு எச்சரிக்கை.


கைது செய்த காவல் துறை அதிகாரி சொல்கிறார்:


“நாங்க கற்பனை செய்துகூட பார்க்கலை. இவன் பத்தாம் வகுப்பு தேறி இருப்பானா என்றே சந்தேகம். பாதுகாப்பையும், அன்பையும் விரும்பும் பெண்களின் இயல்பை நன்றாக பயன்படுத்தி இருக்கிறான். இவன் வலையில் விழுந்து இவனைத் திருமணம் செய்தவர்கள் 27 பெண்களுக்கும் அதிகமானவர்கள்.


ஏதோ படிப்பறிவில்லா பெண்கள் அல்ல. மருத்துவர்கள், பட்டய கணக்காளர், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் அதுவும் உச்ச நீதி மன்றம், டில்லி உயர் நீதி மன்றத்தில் இருப்பவர்கள். அது மட்டுமல்ல, கேரள மாநிலத்தில் உயர் பதவியில் இருப்பவர் ஒருவர், மேலும் சிறப்பு காவல் துறையில் இருப்பவர் என பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளான்.“ …ஒடிசா உயர் காவல் துறை அதிகாரி சஞ்சீவ் சத்பதி


எப்படி இத்தனை பெண்களை ஏமாற்றினாய் என்ற கேள்விக்கு அவன் பதில். அங்கே, இங்கேன்னு அலைய வேண்டாம் சார். இருக்கவே இருக்கே Jeevansathi.com, Shaadi.com, Bharatmatrimony.com என்றானாம்!


உலகமயமாக்கலில் காணாமல் போனவர்கள், நம்ம ஊர் கல்யாண தரகர்களும் தான்.


கல்யாண மன்னனின் வயது என்ன தெரியுங்களா வெறும் 66 தானாம்!

பெயர்: பிபு பிரகாஷ் சுவெய்ன்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)





 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page