18/09/2022 (567)
அவன் இப்போது ஒரு குளத்தருகே அமர்ந்துள்ளான். நல்ல இனிமையான காற்று வீசுகிறது. கற்பனை சிறகை விரித்து அவன் அக்குளத்தின் மேல் பறந்து கொண்டு இருக்கிறான். அவனுக்கு அந்தக் குளத்தில் பூத்திருக்கும் ‘குவளை’, ‘ஆம்பல்’ மலர்கள் அவனின் கவனத்தை ஈர்க்கின்றன. (தற்காலத்தில் ‘அல்லி’ என்று அழைக்கப்படும் மலர்கள்)
இரண்டுமே அழகான மலர்கள்தான். இரண்டும் இந்தக் குளத்தில் ஒருங்கே தோன்றியதுதான். இருந்தாலும், இந்தக் குவளைக்குத்தான் மதிப்பு அதிகம். குவளையும், ஆம்பலும் ஒன்றாகாது.
குவளையின் மனமே மனம். ஆம்பலிலோ மனம் ஒன்றும் கிடையாது. நாலடியாரிலிருந்து ஒரு பாடல் அவனுக்கு நினைவுக்கு வருகிறது.
“ஓருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பல் ஒக்கல்லா
பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
கருமங்கள் வேறு படும்.” --- நாலடியார் 236
ஒரே குளத்தில் பிறந்தும், வளர்ந்தும் இருந்தாலும் குவளையும், ஆம்பலும் ஒன்றாகாது. அது போல, நன்மக்களிடம், தீய எண்ணம் கொண்டவர்கள் நட்புடன் கலந்தே இருந்தாலும் அவர்களின் செயல்கள் நல்லவைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஓருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பல் ஒக்கல்லா =ஒரே குளத்தில் பிறந்தும் வளர்ந்தும் இருந்தாலும் குவளையும், ஆம்பலும் ஒன்றாகாது (அது போல)
பெருநீரார் = நன்மக்கள், உயர்ந்தவர்கள்; நீர் அல்லார் = நல்ல தன்மை இல்லாதவர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள்; கேண்மை கொளினும் = நட்புடன் அந்த நல்லவர்களுடன் இருந்தாலும்; கருமங்கள் வேறுபடும் = அது போன்றவர்களின் செயல்கள் நல்லவைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
அதனால்தான் என்னமோ இந்தக் குவளை சற்றே தலை நிமிர்ந்து நிற்பது போல அவனுக்குத் தோன்றுகிறது. இருப்பினும் இதற்கு இவ்வளவு பெருமை இருக்கக்கூடாது என்று நினைக்கின்றான்.
இந்தக் குவளைக்கோ கான்பதற்கு கண்கள் இல்லை! இதற்கு கண்கள் மட்டும் இருந்து என்னவளைக் கண்டால் இப்படியா தலையைத் தூக்கி செம்மாந்து நிற்கும்?
என்னவளின் அழகிற்கு நாம் எம்மாத்திரம் என்று தலைகவிழாதோ? என்று எண்ணுகிறான்.
“காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண் ஓவ்வேம் என்று.” --- குறள் 1114; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
அழகினாலேயே செய்யப்பட்ட என்னவளின் கண்களுக்கு நாம் எம்மாத்திரம் என்று கண்ட மாத்திரத்திலேயே இந்தக் குவளை மலர்கள் தலை கவிழ்ந்து நிற்கும்.
மாணிழை கண் ஓவ்வேம் என்று = அழகினாலேயே செய்யப்பட்ட என்னவளின் கண்களுக்கு நாம் எம்மாத்திரம் என்று;
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் = (என்னவளைக்) கண்ட மாத்திரத்திலேயே இந்தக் குவளை மலர்கள் தலை கவிழ்ந்து நிற்கும்;
இது ஒரு கற்பனைதான். அந்தக் குவளையும் அவளைக் காண இயலாது. நாணித் தலைகுனியவும் முடியாது. கற்பனக்குத்தான் எல்லைகள் இல்லையே!
அதாவது, இரு வகையாலும் நீ (குவளை மலர்) என்னவளுக்கு நிகர் இல்லை என்று சொல்வது போல அமைந்தப் பாடல் இது.
அஃதாவது, உனக்கு ‘கண்கள்’ இல்லை என்பது மட்டுமல்ல, உனக்கு என்னவளின் சிறந்த பண்பான ‘நாணமும்’ இல்லை. நீ எப்படி என்னவளுக்கு நிகராக முடியும்?
சரியான கேள்விதான் கற்பனா உலகத்தில்!
(இந்தக் கவிஞர்கள் எல்லாம் எப்படித்தான் அந்தக் கற்பனா உலகத்திற்கு செல்கிறார்களோ?)
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentários