17/03/2024 (1107)
அன்பிற்கினியவர்களுக்கு:
நிலவே நீ சற்று உறங்கினால் நானும் உறங்குவேன். நேரிலே காணமுடியாத என்னவரைக் கனவிலாவது காண்பேன் என்று உரை சொன்னார் மணக்குடவப் பெருமான்.
சற்றே கண்ணயர கனவுகள் கற்பனைக்கு எட்டாது எழுகின்றன. அதைத் தோழிக்குச் சொல்லவதற்காகக் கனவு நிலை உரைத்தல் என்னும் அதிகாரத்தை அடுத்த அதிகாரமாக அமைத்துள்ளார்.
முதல் குறளில், கனவிற்கு எப்படி விருந்து வைத்துப் பாராட்டுவேன் என் கிறாள்! ஏன்?
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாது செய்வேன் கொல் விருந்து. – 1211; - கனவு நிலை உரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு = என் நிலையறிந்த என் காதலர் எனக்கு ஆறுதல் சொல்ல அனுப்பிய தூதினைக் கொண்டு வந்த அந்தக் கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் கொல் = விருந்து வைத்து எப்படிப் பாராட்டுவேன்.
என் நிலையறிந்த என் காதலர் எனக்கு ஆறுதல் சொல்ல அனுப்பிய தூதினைக் கொண்டு வந்த அந்தக் கனவினுக்கு விருந்து வைத்து எப்படிப் பாராட்டுவேன்.
ஆனால், என்ன செய்ய? அந்தக் கனவும் நான் மீண்டும் உறங்கினால் அல்லவா வரும்?
கயலுண்கண் யான் இரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன். – 1212; - கனவு நிலை உரைத்தல்
கயல் = மீன்; உண்கண் = அவரை விழுங்கத் துடிக்கும் கண்கள்;
கயல் உண்கண் = தண்ணீரிலே இங்கும் அங்குமாகத் துள்ளிக் கொண்டு இருக்கும் மீன்களைப் போல, அவரை விழுங்கத் துடிக்கும் இந்தக் கண்களும் உறங்காமல் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன; யான் இரப்பத் துஞ்சின் = நான், அவற்றைக் கெஞ்சிக் கேட்பது போல சிறிது நேரம் உறங்கினால்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் =என்னவர்க்கு அவரிடம் சொல்லாமல் தள்ளிப்போட்ட ஒரு உண்மையைக் கனவிலாவது உரக்கச் சொல்வேன்; மன் – ஒழியிசை.
தண்ணீரிலே இங்கும் அங்குமாகத் துள்ளிக் கொண்டு இருக்கும் மீன்களைப் போல, அவரை விழுங்கத் துடிக்கும் இந்தக் கண்களும் உறங்காமல் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன. நான், அவற்றைக் கெஞ்சிக் கேட்பது போலச் சிறிது நேரம் உறங்கினால், என்னவர்க்கு அவரிடம் சொல்லாமல் தள்ளிப்போட்ட ஒரு உண்மையைக் கனவிலாவது உரக்கச் சொல்வேன்.
தள்ளிப்போட்ட உண்மையாவது: அவர் இல்லாமல் தன் உயிர் நீடித்து நிலைக்காது என்பது.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント