22/07/2023 (870)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“என் தலைவன் முன் நின்று போர் செய்யாதே, அப்புறம் நீ நடுக்கல்லாகத்தான் நிற்க வேண்டி இருக்கும்” (குறள் 771). இது ஒரு பக்கத்திலிருந்து கேட்கிறது.
மறுபக்கத்தில் இருப்பவர்களும் வீரர்கள்தானே! அவங்க என்ன சொல்கிறார்கள் என்றால்: ரொம்பவே மகிழ்ச்சி தோழா. நாங்களும் யானைகளுடன்தான் போர் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். முயல்களுடன் அல்ல என்கிறார்கள்.
முயலின் மேல் அம்பினை எய்தி அந்த முயலினை மாய்த்து வெற்றியும் பெறலாம். அதில் எங்களுக்குப் பெரிய பெருமை இல்லை.
யானையின் மேல் நாங்கள் எய்தும் அம்பினால் ஒரு வேளை அந்த யானையானது பிழைத்தும் கொள்ளலாம். அந்த அம்பு பிழையாகிப் போனாலும் அந்த அம்பினை ஏந்தியது இனிமை என்பேன் என்றானாம் மறுமுனையில் இருந்தவன்!
இந்தக் காட்சியைத்தான் நம் வள்ளுவப் பெருந்தகை குறளில் படம் பிடித்துக் காட்டுகிறார்.
“கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது.” --- குறள் 772; அதிகாரம் – படைச் செருக்கு
கான முயல் எய்த அம்பினில் = காட்டிலே மறைந்து ஓடித் திரியும் முயலினைக் குறி தவறாது எய்த அம்பைவிட; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது = பயமில்லாமல் எதிர் நிற்கும் யானையை நோக்கி எய்த அம்பினால் அந்த யானை பிழைத்துக் கொண்டாலும் அந்த அம்பினை ஏந்தி இருந்தோமே என்று மகிழ்பவர்கள் நாங்கள்.
காட்டிலே மறைந்து ஓடித் திரியும் முயலினைக் குறி தவறாது எய்த அம்பைவிட பயமில்லாமல் எதிர் நிற்கும் யானையை நோக்கி எய்த அம்பினால் அந்த யானை பிழைத்துக் கொண்டாலும் அந்த அம்பினை ஏந்தி இருந்தோமே என்று மகிழ்பவர்கள் நாங்கள்.
இதற்கு அந்தப் பக்கதில் இருந்து உரையாடல் மேலும் எப்படி தொடர்கிறது என்பதை நாளைப் பார்ப்போம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare