25/05/2022 (453)
தகை மாண்ட தக்கார் செறின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் பயனில்லாமல் போகும் என்று குறள் 897ல் குறிப்பிட்ட நம் பேராசான் மேலும் தொடர்கிறார்.
பெரியார்கள் குணக்குன்றுகள். குன்று என்றால் மலை. மலையானது வெயிலையும் பொறுக்கும், கடுமழையையும் தாங்கும், அது தன் மட்டில் பொருட்படுத்தாது நின்று கொண்டிருக்கும். அவர்களை ‘குன்றன்னார்’ என்று குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை.
அதாவது, அவர்களுக்கு இயல்பாகவே கடந்து போகும் (tolerance) மனப்பாங்கு இருக்கும். அவர்களே வெகுண்டால், கோபம் கொண்டால் மற்றவர்களால் தாங்க இயலாது. “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி” என்று குறிப்பிட்டதைக் கவனிக்க வேண்டும். காண்க 12/08/2021 (170).
அருந்தவத்தால் உயர்ந்த பெரியார்களாகிய குன்றன்னார், ஒருவரது செயல்களைக் கண்டு, சலித்து கோபம் கொண்டால், அவர் எவ்வளவு பெரிய குடிப்பெருமையோடு நின்றாலும் (நின்றன்னார்) இவ்வுலகில் அழிந்துபடுவார்கள் என்கிறார்.
“குன்றன்னார் குன்றமதிப்பின் குடியோடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.” --- குறள் 898; அதிகாரம் – பெரியாரைப்பிழையாமை
குன்று அன்னார் குன்ற மதிப்பின் = மலைபோல அருந்தவத்தால் உயர்ந்து நிற்பவர்கள் கோபம் கொண்டு ஒரு கண நேரம் ஒருவர் அழியவேண்டும் என நினைத்தால்; குடியோடு நின்றன்னார் நிலத்து மாய்வர் = எவ்வளவு பெரிய குடிப்பெருமையோடு வாழ்ந்து கொண்டு இருப்பினும், இந்நிலத்தில் அழிவதைக் காணலாம்.
மலைபோல அருந்தவத்தால் உயர்ந்து நிற்பவர்கள் கோபம் கொண்டு ஒரு கண நேரம் ஒருவன் அழியவேண்டும் என நினைத்தால், அவன் எவ்வளவு பெரிய குடிப்பெருமையோடு வாழ்ந்து கொண்டு இருப்பினும் இந்நிலத்தில் அழிவதைக் காணலாம்.
பெரியார்களை பிழையாமை மிகவும் முக்கியம் என்பதை பல விதத்தில் நமக்கு எடுத்து வைக்கிறார். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக இருக்கட்டும். ‘செருக்கு எனும் செருப்பணிந்து செல்லாதே’ என் செல்வங்களே என்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )

Comments