10/08/2022 (529)
“இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு” என்பது நேர்மறையாகச் சொல்வது.(Optimistic).
“ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” என்பது எதிர்மறையாக விளக்குவது. (Pessimistic).
“குன்று” என்றால் மலை, உயர்ந்த; “குன்றிய” என்றால் குறைந்த, தாழ்ந்த, இழிந்த; “குன்றி” என்றால் மிகச் சிறிய, (உதாரணம்: குன்றி மணி)
சரி இதெல்லாம் எதற்கு? காரணம் இருக்கு.
அதாவது, நல்ல குடியில் பயணிப்பவர்கள் தன் செயல்களால் மலைபோல உயர்ந்து நின்றாலும் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுவார்களாம்!
எப்போது என்றால் குடிக்கு ஒவ்வாத இழி செயல்களை சிறிதளவு செய்ய முயன்றாலும் அவர்கள் தாழ்ந்துவிடுவார்களாம்.
அப்புறம்?
அதான் பார்த்தோமே, அவர்கள் அதற்கு அப்புறம் ஒரு “________” தான்.
“குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.” --- குறள் 965; அதிகாரம் – மானம்
குன்றின் அனையாரும் = மலை போல உயர்ந்து இருந்தாலும்; குன்றுவ = இழி நிலைக்குத் தள்ளக்கூடிய செயல்கள்; குன்றி அனைய = ஒரு துளியளவு; செயின் = செய்தாலும்; குன்றுவர் = தாழ்ந்து விடுவர்
மலை போல உயர்ந்து இருந்தாலும் இழி நிலைக்குத் தள்ளக்கூடிய செயல்களை ஒரு துளியளவு செய்தாலும் தாழ்ந்து விடுவர்.
ஒரு சொல், ஒரு பாடலிலேயே, பல இடங்களில் வந்து பல பொருள்களை உணர்த்துவதால் அதை “சொல் பொருள் பின்வரு நிலையணி” என்று சொல்கிறார்கள்.
புகழைப் பற்றி நாம் பலவாறு, திருக்குறள் வாயிலாக சிந்தித்துள்ளோம். நாம் செய்யும் செயல்களால் ஒரு கீர்த்தி, ஒரு ஒளி (image) நாம் வாழும் காலத்திலேயே கிடைக்கும். நாம் மறைந்த பின்பும் புகழானது நிலைக்கும். அதாவது, இம்மை. மறுமை பயன் கிடைக்கும். இரண்டிலுமே பேசப் படுவோம்.
இல்லறவியலின் கடைசி அதிகாரமாக “புகழ்” எனும் அதிகாரத்தை (24ஆவது) அமைத்துள்ளார் பேராசான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாம் மறைந்தபின் வேறு ஒரு நாட்டிற்கு செல்வோம் என்ற கருத்து பெரும்பாலும் அனைத்து மதங்களிலும் உள்ளது. அந்த நாட்டிற்கு சொர்கம், சிவலோகம், வைகுந்தம், ஜன்னா என்றும் பலவாறு அழைக்கிறார்கள்.
ஓடுகின்ற நதியில் காலை நனைப்பது என்பது ஒவ்வோரு நொடியும் புது தண்ணீரிலே தான்!
நதிகளோ எப்போதும் ஓடுவதில்லை. ஆனால், இந்தப் பூமிப்பந்து எப்போதும் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. இதிலும் ஒவ்வொரு நொடியும் புதிதுதான்.
உருவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நொடியும் புது உலகம் தோன்றிக் கொண்டேயுள்ளது.
வரும் புது, புது உயிர்களின் மனதிலும் நிலைத்தால், அதற்கும் நம் செயல்கள் உதவினால், அதுதான் மறுமை பயன். இதைத்தான் “sustainable goals” என்கிறார்கள். அதாவது, “காலம் கடந்த குறிக்கோள்கள்”.
சரி, இந்த தத்துவவிசாரம் இப்போது எதற்கு என்றால் “மானம்” என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோமே அதுவும் இம்மை, மறுமை பயன்கள் கருதித்தான். இதுவும் ஒரு “sustainable goal” என்று நம் பேராசான் அப்போதே சொல்லிச் சென்றுள்ளார்.
இந்தக் கருத்தை வரும் குறளில் சொல்லப்போகிறார் நம் வள்ளுவப் பெருந்தகை என்று முடித்தார் ஆசிரியர்.
நாளை சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments