குறள்கள் 227, 43
30/01/2022 (339)
கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்றார் ஔவைபெருந்தகை. அந்தக் கொடுமைகளைத்தான் நமது ஐயன் படம் பிடித்துக் காட்டுகிறார். அவரே அனுபவிப்பது போல ஆழ்ந்துணர்ந்து குறள்களை அமைத்துள்ளார்.
பேச்சு எடுபடாது என்று குறள் 1046ல் தெரிவித்த நம் பேராசான், ஈன்றத் தாயாலும் கைவிடப்படும் கொடுமையை குறள் 1047ல் சொன்னார்.
அடுத்து, படம் படித்துக் காட்டுவது, உணர்ச்சிகளின் உச்சம்.
மயக்கத்திலிருந்து காலையில் கண்விழிக்கிறான். அவன் தூங்கியது எப்போது? மயக்கம்தான் அவனுக்குத் தூக்கம். கண்விழிக்கும் போதே அவனைப் பிணி துரத்துகிறது. என்ன பிணி?
அதைப் பார்க்கும் முன்:
நோயுக்கும் பிணிக்கும் என்ன வித்தியாசம்ன்னு நாம ஏற்கனவே பார்த்தோம். நோய் என்பது வரும், போகும். நம்ம கூடவே எப்பவும் இருக்காது. பிணி என்பது நம்முடன் எப்போதும் பிணைந்திருக்கும்; விட்டுப் பிரியாது.
அதிலேயும் எந்தப் பிணி தீப்பிணி என்றால் பசிதான் தீப்பிணி என் கிறார் நம்பெருமான். மீள்பார்வைக்காக:
“பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.” --- குறள் 227; அதிகாரம் - ஈகை
பாத்தூண் = பகுத்து உண்ணும்; மரீஇ யவனைப் = பண்பைப் பயின்றவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது = நல்லொழுக்கங்களை அழிக்கும் பசி என்கின்ற கொடிய பிணி அணுகாது.
இருக்கும்போது பகிர்ந்து உணவிட்டு மகிழ்ந்தவனை பசியெனும் தீப்பிணி அனுகாது என்கிறார். காண்க 09/07/2021 (137)
நம்மாளு: ஐயா, இது பொய்த்துப் போகுதே! ஊட்டி ஊட்டி வளர்த்தப் பிள்ளை கைவிட்டுப் போகுதே. கடைசியில் தனிமையிலும் பசியிலும் வாடும் நிலை இருக்கே ?
ஆசிரியர்: அங்கேதான் ஒரு நுணுக்கத்தை வைத்துள்ளார். “பார்த்தூண்” என்று சொல்லி இருக்கிறார். பகிர்ந்து அளிப்பது தம் மக்களுக்கு மட்டுமல்ல. இல்லறத்தானுக்கு முக்கியமாக ஐந்துபேரை பார்த்துக் கொள்ளும் கடமை இருப்பதை மறந்து தன் மக்களை மட்டும் பார்த்துக் கொள்ளும்போது இது பொய்த்துப் போகலாம். ஆங்கிலத்தில் “Do not put all eggs in one basket” – “உனது எல்லா முட்டைகளயும் ஒரே கூடையில் வைத்துவிடாதே” என்கிறார்கள்.
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.” --- குறள் 43; அதிகாரம் - இல்வாழ்க்கை
காண்க 01/03/2021 (43), 02/03/2021 (44)
மீள்பார்வையிலேயே நேரம் சென்றுவிட்டது. நாளை தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
