கால்ஆழ் ... 500
19/11/2022 (625)
வலியறிதல் (48 ஆவது அதிகாரம்), காலமறிதலைத் (49) தொடர்ந்து இடனறிதலைக் (50) குறித்து சொல்கிறார்.
இடம் என்பதன் ஈற்று எழுத்து (அதாவது கடைசி எழுத்து “ம்”) திரிந்து இடன் என்று ஆகிவிட்டது. இது ஈற்றுப் போலி அல்லது கடைப் போலி என்று தமிழ் இலக்கணத்தில் குறிக்கிறார்கள்.
இடர் என்பதும் திரிந்து இடன் என்று ஆகும். ஆகையால், இடம் சுட்டி பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இடனறிதல் என்பது தகுந்தக் களத்தை தீர்மானிப்பது. வலிமை, காலத்தைத் தொடர்ந்து, களம் மிக முக்கியம் என்பதால் அந்த வரிசையில் அமைத்துள்ளார்.
இது நிற்க.
‘அடு’ என்றால் அழி, சிதை என்று பொருள். எந்தப் பொருளும் உண்மையில் அழிவதில்லை. வேறு ஒரு பொருளாகத்தான் மாற்றம் பெறுகிறது.
படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்றாக இயற்கையின் அல்லது இறையின் செயல்களைப் பிரித்தாலும் ‘அழித்தல்’ என்பது ‘மறைத்தல்’, ‘அருளல்’ என்று இரு கூறுகளாகப் பிரியும். இதனைத்தான் ‘பஞ்ச கிருத்தியங்கள்’ அல்லது ‘ஐந்தொழில்கள்’ என்கிறார்கள்.
‘அடுமனை’ என்றால் kitchen என்று சொல்கிறோமே அதுதான். அங்கே, பொருள்களின் கூட்டு மாற்றம் பெற்று உணவாகிறது.
சரி, இந்தக் கதையெல்லாம் இப்போ எதற்கு என்கிறீர்களா? ஒன்றுமில்லை, ‘அடும்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதில் ஏற்பட்ட பிரச்சனைதான் இந்தச் சொல் ஆராய்ச்சியும், தத்துவ ஆராய்ச்சியும்.
‘அடும்’ என்றால் வேறு ஒன்றுமில்லை ‘அழிக்கும்’ அல்லது ‘வென்று விடும்’ என்று பொருளாம்.
நாம் ஏற்கனவே, இந்த இடனறிதல் அதிகாரத்தில் இருந்து, கடைசிக் குறளைப் பார்த்துள்ளோம். காண்க 04/04/2021 (77). மீள்பார்வைக்காக:
“கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆழ் முகத்த களிறு.” ---குறள் 500; அதிகாரம் – இடனறிதல்
வேல்ஆழ் முகத்த களிறு = வேல் கொண்டு எரிய வந்தால் கண்ணைக் கூட சிமிட்டாத யானை; களரில் = சேற்றில்; கால்ஆழ் = கால் சிக்கிட்டா; நரிஅடும் = நரி கூட யானையை வென்றுடும்!
யானை போய் சேற்றில் சிக்கிக் கொண்டால் அதன் பாடு திண்டாட்டம் ஆகி விடுகிறது. அதைப்போல, முதலையார் தண்ணீரை விட்டு வெளியே வந்துவிட்டால் அதன் பாடு அதோகதியாகி விடுகிறது.
அதற்குத்தான் நம்ம கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இவ்வாறு ஒரு பாடலைப் புனைந்துள்ளார்:
“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது..”
திரைப்படம் – சூரியகாந்தி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கவியரசர் கண்ணதாசன் வரிகளில்.
அர்த்தமுள்ள பாடல். நேரம் இருப்பின் கேட்டு மகிழலாம்.
நம்மாளு: ஐயா, குறள், குறள் ...
ஆசிரியர்: ஆமாம், எங்கேயோ போயிட்டேன். குறள், குறள். ம்ம்.. அதான் முக்கியம். ரொம்ப நேரம் ஆனால் போல் இருக்கிறது.
முதலையாரைப் பற்றி நாளை பார்க்கலாமா?
நம்மாளு: சரி ஐயா. (ஆசிரியர் ஏதோ தீவிர சிந்தனையில் இறங்கிவிட்டார். என்ன சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே)
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
