23/03/2024 (1113)
அன்பிற்கினியவர்களுக்கு:
அவர் என் அருகில் இருந்த பொழுது காலையும் மாலையும் இரண்டுமே ஒன்றாக இருந்தன. அது மட்டுமா, அந்தப் பொழுதுகள் காலையா மாலையா என்றே அறியாமல் அல்லவா இருந்தோம்!
இப்பொழுது, காலையில் கண் விழித்தால், அவரை இன்று காண மாட்டோமா என்று ஒரு ஏக்கம், ஒரு நம்பிக்கை.
ஆனால், மாலை வர வர … ஓஒ என்ன செய்வேன்…
என் உயிரையே மாலை அசைத்துப் பார்க்கிறது. கொலைஞன் கொலை வாளை எடுத்துக் கொண்டு என்னை நெருங்குவது போன்றதொரு அச்சம் என்னைப் பிடித்துக் கொள்கிறது!
காலைக்கு நான் அறிந்து எந்த நன்மையும் செய்திடவில்லை. இருப்பினும், அது எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது. மாலைக்கு நான் செய்த கொடுமைதான் என்ன? என்னை மிகவும் அச்சம் கொள்ள வைப்பதென்ன?
காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. – 1225; - பொழுது கண்டு இரங்கல்
கொல் = அசை நிலை;
காலைக்குச் செய்த நன்று என் = அவரைப் பிரிந்திருக்கும் இந்த நாள்களில் எனக்கு ஒரு நம்பிக்கையைத் தரும் காலைப் பொழுதிற்கு நான் செய்த நன்மைதான் என்ன?; யான் மாலைக்குச் செய்த பகை எவன் = என்னை அச்சமூட்டிக் கொல்லும் இந்த மாலைக்கு நான் செய்த தீமைதான் யாது?
அவரைப் பிரிந்திருக்கும் இந்த நாள்களில் எனக்கு ஒரு நம்பிக்கையைத் தரும் காலைப் பொழுதிற்கு நான் செய்த நன்மைதான் என்ன? என்னை அச்சமூட்டிக் கொல்லும் இந்த மாலைக்கு நான் செய்த தீமைதான் யாது?
யாமறியேன் பராமரமே என்று புலம்புகிறாள். மேலும் தொடர்கிறாள்.
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். – 1226; - பொழுது கண்டு இரங்கல்
மணந்தார் அகலாத காலை = என்னை மணந்தவர் பிரிந்திராத வேளையில்; மாலை நோய் செய்தல் = இந்த மாலைப் பொழுது இப்படி ஒரு துன்பத்தைக்கூட கொடுக்கவல்லது; அறிந்தது இலேன் = என்பதனை அறியாத அப்பாவியாக இருந்திருக்கிறேன்.
என்னை மணந்தவர் பிரிந்திராத வேளையில், இந்த மாலைப் பொழுது இப்படி ஒரு துன்பத்தைக்கூட கொடுக்கவல்லது என்பதனை அறியாத அப்பாவியாக இருந்திருக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments