top of page
Search

கேளிழுக்கம் கேளாக் ... குறள் 808

31/12/2021 (309)

நேற்று எழுத இயலவில்லை. மன்னிக்க. காரணம் இந்தப் பதிவை கடைசி வரைப் படித்தால் விளங்கும்.

பழமை அதிகாரத்தில் எட்டாவது குறளைப் பார்ப்போம். அந்த குறளுக்கு பல விதமாக பொருள் சொல்கிறார்கள். முதலில் விளக்கங்களைப் பார்க்கலாம்.


முதறிஞர் மு.வ. : பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.


மணக்குடவப் பெருமான்: நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையையறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.


தமிழறிஞர் தமிழண்ணல்: தமது நண்பர்களது பிழையைப் பிறர் வந்து சொன்னாலும் அதைக்கேட்டுக்கொள்ளாத அத்துணையளவு நட்புரிமையைப் போற்றுபவர்களுக்கு, அந் நண்பர்கள் பிழையானவற்றைச் செய்வார்களாயின், அந்த நாள் அவர்க்கு உண்மையன்பைக் காட்டக் கிடைத்த நல்ல நாளாகும்.


புலவர் புலியுர் கேசிகன்: நண்பரின் குற்றங்குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளின் குறையாகவே தோன்றும்.


சரி, அந்த குறள்தான் என்னன்னு கேட்கறீங்க? இதோ:


கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாள்இழுக்கம் நட்டார் செயின்.” --- குறள் 808; அதிகாரம் - பழைமை


இந்தக் குறளுக்குத்தான் மேற்கண்ட விளக்கங்கள். எனக்கு அந்த விளக்கங்களில் தெளிவு பிறக்கவில்லை. சொன்னவர்கள் எல்லாம் மாபெரும் அறிஞர்கள். தவறாக சொல்லியிருக்க வாய்ப்பில்லை.


நண்பர்கள் தவறு செய்தால் எப்படி நல்ல நாளாக இருக்கும்? என்ற குழப்பம் என்னை ஆட்டுவித்தது. வேறென்ன? எனதருமை ஆசிரியரை அனுக முயன்றேன். அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் போலும்.


சரி, உங்களைக் கேட்கலாம் என்று எழுதிவிட்டேன், ஒரு நல்ல விளக்கம் ஒன்று. புத்தாண்டு பிறக்கும் நல்ல நாளுக்குள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.


அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்துகள்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




35 views2 comments
Post: Blog2_Post
bottom of page