top of page
Search

கைவேல் களிற்றொடு ...

24/07/2023 (872)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

பேராண்மையையும் ஊராண்மையையும் (குறள் 773) எடுத்துச் சொன்ன அணிக்கு எதிரில் இருந்த அணி அவர்களின் கருத்தை எடுத்து வைப்பதைப் போல அமைத்திருக்கிறார் நம் பேராசான்.

அதாவது, வீரனுக்கு எது செருக்கு தெரியுமா தோழா? கேட்டுக் கொள்:

அவன் கையில் ஒரே வேல்தான் இருக்கிறது. வருவதோ பெரிய வலுவான யானை! அவன் அதைக் குறித்து அஞ்சாமல், குறிபார்த்து அந்த வேலை எறிகிறான்.


அதனால், அந்த யானை நிலை குலைந்து திரும்பி ஓடுகிறது. அதனை அடுத்து அவனை நோக்கி மற்றுமொரு தாக்குதல் வருவதைப் பார்க்கிறான். அவன் கையிலோ எந்த ஆயுதமும் இல்லை! இது என்ன சோதனை என்று நினைத்துக் கொண்டு சற்றே கண் தாழ்கிறான்.

அடடா, இந்த வேல் இருப்பதை நான் கவனிக்கவில்லையே! என்று எண்ணிச் சிரிக்கிறான்.


எந்த வேல்?


அவன் மார்பினில் எதிரி எறிந்த வேல் தைத்துக் கிடப்பதைப் பார்த்துதான் நகுகிறான். உடனே, அதனைப் பிடுங்கி அடுத்தத் தாக்குதலுக்குத் தயாராகிறான்.


இது போன்றவர்கள் நிறைந்த அணிதான் எம்முடையது என்கிறான்!


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.” --- குறள் 774; அதிகாரம் – படைச் செருக்கு


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்= தன் கையில் இருந்த வேலை அந்த யானையின் மீது வீசித் தாக்கியதால் அந்த யானையானது நிலை குலைந்து அவன் வேலோடு திரும்பி ஓட்டம் பிடிக்க அவன் கையிலோ அடுத்துத் தாக்க ஆயுதம் இல்லை என்பதை எண்ணுகிறான்.

மெய்வேல் பறியா நகும் = இதோ, அவன் மீது பாய்ந்திருக்கும் அந்த வேலைக் காண்கின்றான். சிரிக்கிறான்! அடடா, இதனைப் பிடுங்கி அடுத்துப் பயன்படுத்த வேண்டியதுதானே என்று எண்ணி அவனுக்குள்ளேயேச் சிரிக்கிறான்.


நாம் எதிர்கொள்ளக் கருவிகள் இல்லையே என்ற கவலை வேண்டாம். எதிரி நம் மேல் எறிந்த ஆயுதங்களையே அவன் மேல் திருப்பிவிடு என்பது குறிப்பு. அந்த ஆயுதங்கள் எப்போது நம் கண்ணுக்குத் தெரியும் என்றால் நாம் அஞ்சாமல் பதட்டப்படாமல் இருந்தால் தெரியும் என்பது மற்றுமொரு குறிப்பு.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page