top of page
Search

சமன்செய்து ... 118, 115

30/09/2023 (938)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

எச்சரிக்கை: நீண்ட பதிவு.

பன்னிரண்டு ராசிகளில் துலாம் ராசி (Libra) ஏழாவது ராசி. இதன் சின்னம் தராசு.

இது ஒரு வித்தியாசமான ராசி. மற்ற ராசிகளுக்கெல்லாம் விலங்கினமாகவோ, புராணப் பாத்திரங்களாகவோ அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் போது இது மட்டும் தனித்துத் தராசாக இருக்கும்.


தெமிஸ் (Themis) என்ற பெண் தேவதை பழம் கிரேக்கத்தில் இருந்ததாக ஒரு நம்பிக்கை. அந்தத் தேவதை சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை (Law and Customs) நிலைநிறுத்தத் தோன்றியவர் என்றும் கருதுகிறார்கள். அந்த தெமிஸ் தன் கைகளில் தராசினை வைத்திருப்பது போல சித்தரிக்கப்படுகிறார்.


உலகமெங்கும் நீதி தேவதையின் வடிவமாக உருவகிக்கப்படுவது தெமிஸின் மகள் ஜஸ்டிசியா (Justicia) வடிவத்தின் துணையாக்கங்கள்தான். ஜஸ்டிசியா தன் இடது கையில் தராசினையும் தனது வலது கையில் இருபுறமும் கூர்மையாகத் தீட்டப்பட்ட நீண்ட வாளும் வைத்திருப்பார். இரண்டு பக்கமும் நினைக்கும் நேரத்தில் சீவிடுவாங்கப் போல!


தேவதைகள் தெமிஸ் மற்றும் ஜஸ்டீசியா இருவருமே கருப்பு நிறத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கிறார்கள். கருப்பு நிறத்திலும் தேவதைகள் இருப்பார்கள்.


வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி

பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ

இந்த நிறம் சிறிதென்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ...” மகாகவி பாரதி


இது நிற்க.


அந்தக் கருப்பு தேவதைகள் அணிந்திருக்கும் அங்கியின் நிறமும் கருப்புதான். அதன் தொடர்ச்சிதான் நம் வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் கருப்பு அங்கியினை அணிந்து கொள்கிறார்கள்.


இது இருக்கட்டும். நாம் நம்ம ஊர் நீதி தேவதைக்கு வருவோம். நமது நாட்டிலும் நீதிதேவதை தன் இடது கையால் தராசினை ஏந்திக் கொண்டிருப்பார். அவரின் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டிருக்கும். அவரது வலது கையில் வாள் இருக்காது. அதற்குப் பதில் சட்ட நூல் இருக்கும்.


இரு பக்கத்தின் கருத்துகளையும் நடுவுநிலைமையோடு கேட்டு, நிறுத்து நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத் தராசு. அப்படி நீதி வழங்கும்போது, புற அழுத்தங்களின் காரணமாகத் தராசினை ஒரு பக்கமாக சாய்த்துவிடக்கூடாது என்பதற்காகக் கண்களைக் கட்டும் குறியீடு. வழங்கும் அந்த நீதிக்கு அடிப்படை, சட்டங்கள் என்ற வகையில் வலக்கையில் சட்டப் புத்தகம்.


இதை அப்படியே மனத்தில் நிறுத்துங்கள். நாம் இப்போது குறளுக்குள் நுழைவோம்.


நடுவுநிலைமை பிறழாமல் இருப்பதுதான் உயர்ந்தவர்க்கு அழகு. அதனை இரு குறள்களில் எடுத்துச் சொல்கிறார். அஃதாவது, “கோடாமை சான்றோர்க்கு அணி” என்கிறார். கோடு என்றால் வளைதல்; கோடாமை என்றால் வளையாமை, பிறழாமை.


உலகில் கேடும் ஆக்கமும் மாறி மாறித் தோன்றாமல் இருக்காது. கேடு நிலைத்துவிடுமோ, ஆக்கம் அகப்படாமலே போகுமோ என்று அஞ்சி மனத்தை வளைக்காமல் நடுவுநிலைமை பிறழாமல் இருப்பதுதான் உயர்ந்தவர்க்கு அழகு என்றார் குறள் 115 இல். காண்க 28/09/2023 (936). மீள்பார்வைக்காக:


கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.” --- குறள் 115; அதிகாரம் – நடுவுநிலைமை


மேற்கண்ட குறளில் நம்மிடமிருந்தே தோன்றும் உட்புற அழுத்தத்திற்காக வளையக் கூடாது என்றார்.


அடுத்து, வெளிப்புற அழுத்தத்திற்காவும் வளையக்கூடாது என்கிறார்.


சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி.” --- குறள் 118; அதிகாரம் – நடுவுநிலைமை


சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்து = சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல இருப்பதும்; ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி = ஒரு பக்கமிருந்து, பிற காரணங்களால் அழுத்தங்கள் அதிகரிக்கும்போது பிறழாமல் இருப்பதும்தான் உயர்ந்தவர்க்கு அழகு.


சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல இருப்பதும், பிற காரணங்களால், ஒரு பக்கமிருந்து அழுத்தங்கள் அதிகரிக்கும்போது பிறழாமல் இருப்பதும்தான் உயர்ந்தவர்க்கு அழகு.


தராசுகள் தன் மட்டில் உணர்ச்சிகள் இல்லாதன. அதை இயக்கும் நாம் அவ்வாறல்லவே! நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு வளைவோம் என்பதனைச் சுட்டிக் காட்டவே இந்தக் குறளை அமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.


“தட்டுத் தராசு” அல்லது “கைத் தராசு” அல்லது “சீர் தூக்கும் கோல்” என்பது இரு பக்கமும் உள்ள பொருள்களின் எடையைச் சமன் செய்யும் ஒரு அளவைக் கருவி.


இந்தத் தராசுகளில் சரியாக நிறுக்க, நிறுப்பவரின் கை நடுங்காமல் நடுவு நிலையில் தூக்கிப் பிடிக்க வேண்டும். அவரின் கை ஒரு பக்கம் சாய்ந்தால் அந்தப் பக்கம் எடை முள்ளும் சாயும். ஆகையினால், தராசு சரியாக இருந்தாலும் அதனை நிறுப்பவரும் சரியாக இருக்க வேண்டும்.


அதைப்போல நாமும் நம் செயல்களில் நடுவுநிலைமை பிறழாமல் இருக்க சரியான அறக்கோலும் அதனை இயக்கும் நாமும் சரியாக இருக்க வேண்டும். புறக்காரணிகளின் பாற்பட்டு எக்காலத்திலும் நாம் அறத்தை அழுத்திப் பிறழ வைக்கக்கூடாது.


சமன் செய்து சீர் தூக்கும் கோல்கள் இப்போது அருகிவிட்டன! மின்னணு எடை போடும் இயந்திரங்கள் வந்துவிட்டன.


இப்போது அந்த இயந்திரங்களிலேயே எடையைக் கூட்டிக் காண்பிக்கவும், குறைத்துக் காண்பிக்கவும் வழிமுறைகளைக் கண்டறிந்துவிட்டார்கள்! இது நிற்க.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.

Post: Blog2_Post
bottom of page