சினத்தைப் பொருள்என்று ... குறள் 307
13/04/2022 (411)
நம்மாளு வேகமா நடந்து போயிட்டு இருந்தாராம். அப்போ, அவர் அவசரம் புரியாம குறுக்கே ஒன்னு இருந்ததாம். வந்தது பாருங்க நம்மாளுக்கு கோவம். உட்டாரு ஒரு அறை. அவ்வளவுதான், அங்கே ஐயோ, அம்மான்னு சத்தம்.
எல்லாரும் வந்துட்டாங்க. யாருகிட்ட இருந்து சத்தம்ன்னு பார்த்தா, நம்மாளுகிட்ட இருந்துதான். அம்மான்னு அலறிட்டு இருக்கார். நம்மாளை அடிச்சுட்டாங்களான்னு பார்த்தா, அங்கே யாருமே இல்லை. என்ன செய்தின்னு கேட்டாங்க எல்லாரும்.
இல்லை, இந்த சுவர் நான் போற வழியிலே இருந்தது. எனக்கு கோபம் வந்துடுச்சு. அதான் விட்டேன் ஒரு அறைன்னாராம்!
நம்மாளு போல நம்ம பேராசன் காலத்துலேயும் யாராவது இல்லாமலா இருந்திருப்பாங்க? ஏன் சொல்றேன்னா, நீங்க இந்தக் குறளைப் பாருங்க உங்களுக்கு புரியும்.
“சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று.” --- குறள் 307; அதிகாரம் - வெகுளாமை
கோபத்தைக் காட்டினால்தான் வேலை ஆகும்ன்னு கோபத்தைக் காட்டுபவர்களுக்கு தப்பாம கேடு வருமாம். அது எது போல என்றால், நிலத்தின் மேல் கோபம் வந்து, அந்த நிலத்தை, தன் கையால் அறைந்தால், அவன் கைக்கு வலி நிச்சயம் என்பது போல என்கிறார்.
ஒரு குட்டிக் கதை:
இரண்டு பேரு சண்டை போட்டுகிட்டாங்களாம். இந்த நிலம் எனக்குத்தான்னு ஒருத்தர். இல்லை, இல்லை இது எனதுதான்னு இன்னொருத்தர். அப்போ, ஒரு சிரிப்புக் குரல் கேட்டுச்சாம். என்னன்னு பார்த்தா, அந்த நிலம்தான் சிரிச்சுதாம். அது சொல்லுச்சாம். ஆசையைப் பாரு ஆசையை! நீங்க இரண்டு பேரும் எனக்குத்தான்னுச்சாம்!
சிரிச்சுக்கிட்டே இருங்க. சந்தோஷமா இருங்க.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
