top of page
Beautiful Nature

சினமென்னும் சேர்ந்தாரைக் --- குறள் 306

12/04/2022 (410)


“கோபத்தோடு எழும் எவனும் நட்டத்தோடு அமர்கிறான்” - பழமொழி


“Whatever is begun in anger ends in shame” – பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin)


பெஞ்சமின் பிராங்கிளின் (1706 – 1790) பெருமகனார் அமெரிக்க சரித்திரத்தில் அழியாப் புகழைப் பெற்றவர். பல துறைகளில் தலைசிறந்து விளங்கியவர். அமெரிக்கா பல வகையிலும் வளர்ச்சியடைய அவரின் கருத்துகள் அடிப்படை. எந்தக் கட்சியையும் சாராதவர்.


“இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்.” என்ற அவரின் சொற்றொடர் பலரும் பயன்படுத்தும் ஒன்று.


நாம் இப்போது அணிகிறோமே இரட்டை குவியல் கண்ணாடி (bifocal lens) அன்னாரின் கண்டுபிடிப்புதான். அவரின் கண்டுபிடிப்புகள்: இடி தாங்கி (lightning rod), புதிய அடுப்பு (Franklin’s stove), புதிய ஜலதரங்கம் (Glass armonica), வடி குழாய் (urinary catheter) இப்படிப் பல. ஒன்றுக்கும் காப்புரிமை பெற அவர் விரும்பவில்லை.


சினத்தை விட்டுட்டு எங்கேயே போயிட்டேன்னு நினைக்கறீங்க அதானே? அதுவும் சரி தான். விடத் தான் முயற்சி. சரி குறளுக்கு வருவோம்.


இந்தக் குறள் கொஞ்சம் ஆழமானக் குறள். ஆசிரியர் சொன்னதை அப்படியே சொன்னால் ரொம்பவே அதிகமாக இருக்குமான்னு ஒரு சந்தேகம். சுருக்கமாக:


தன்னைத் தான் காக்கன்னு சொன்ன நம் பேராசான், நம்மைச் சேர்ந்தாரைக் காக்கவும் அது தான் வழி என்று சொல்கிறார். அது மட்டுமல்ல இனத்தையே அது தாக்கும் என்கிறார். வாழ்க்கையெனும் கடலில் நீந்த இனம் என்பது ஒருவருக்கு படகு போல. அந்தப் படகைச் சுற்றி நீர்தான் இருந்தாலும் அந்தப் படகே பற்றிக்கொள்ளுமாம் சினம் என்னும் தீயால்.


சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்

ஏமப் புணையைச் சுடும்.” --- குறள் 306; அதிகாரம் – வெகுளாமை


ஏமம் = பாதுகாப்பு; புணை = படகு; (சேர்ந்தாரை - உயர் திணையில் சொல்கிறார்); சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி = சினமென்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் = தன்னோடு சேர்ந்தவர்களை மட்டுமல்லாது நமக்கு பாதுகாப்பாக வாழ்க்கை எனும் கடலில் படகு போல இருக்கும் இனத்தையே அழித்து விடும்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)



ree



 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page