26/09/2023 (934)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
செய்ந்நன்றியறிதல் அதிகாரத்தைத் தொடர்ந்து நடுவுநிலைமை அதிகாரத்தை வைக்கிறார்.
யாராக இருந்தாலும் நடுவுநிலைமையைக் கடைபிடிக்க வேண்டும். அது என்ன “யாராக இருந்தாலும்?” என்று கேட்டால் அதற்கு அறிஞர் பெருமக்கள் சொல்வன: எதிரில் இருப்பவர் பகையாக இருக்கலாம், அல்லது நட்பாக இருக்கலாம், அல்லது இவ்விரண்டும் இல்லாமல் நம்மைவிட்டு ஒதுங்கி நிற்பவராக இருக்கலாம். இவர்களை நட்பு, பகை, நொதுமல் என்று அழைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
இவர்கள் அனைவரிடமும் நடுவுநிலைமை பேண வேண்டும் என்கிறார். தலைமையானது, அவர் நமக்கு வேண்டப்பட்டவர் என்றோ; இவர் நமக்கு ஆகாதவர் என்றோ; அதோ இருக்கிறாரே அவரை எனக்குத் தெரியவே தெரியாது என்றோ எண்ணி ஆளுக்கு ஏற்றார்போல் பேசுவதும், நடப்பதும் கூடாது என்கிறார்.
ஆளைக்காட்டு நான் அவருக்குச் சட்டம் (Rule ஐ) என்னவென்று காட்டுகிறேன் என்றால் ஆங்கே நடுவுநிலைமை இல்லை.
சரி, இந்த அதிகாரத்தை எதற்கு செய்ந்நன்றியறிதலுக்கு அடுத்து வைத்தார் என்றால் செய்த நன்றிக்காவும் நடுவுநிலைமையைத் தவறக்கூடாது என்பதனை வலியுறுத்தவாம்.
செய்நன்றி மறவாமை முக்கியம்தான், இருப்பினும், அதனினும் முக்கியம் நடுவுநிலைமைத் தவறமால் இருப்பது!
சரி, அப்போது பகை, நட்பு, நொதுமல் மூவருக்கும் ஒரே வழியா என்றால் அதுதான் இல்லை என்கிறார்! எல்லாருக்கும் எல்லாமும் சொல்லிவிடலாமா என்றால் அது கூடாது என்கிறார்.
ஆயுதங்களை இழந்து நிற்கும் வீரனிடம் “இன்று போய் நாளை வாராய்” என்பது பகைவனிடம் நடுவுநிலைமை.
இந்த அதிகாரத்தின் முதல் குறளை நாம் ஏற்கெனவே ஒரு முறை பார்த்துள்ளோம். காண்க 13/06/2021 (111). மீள்பார்வைக்காக:
“தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.” --- குறள் 111; அதிகாரம் – நடுவுநிலைமை
நடுவுநிலைமையுடன் இயற்றிய பொருளுக்கு அழிவில்லையாம். அதன் பயன் ஈட்டியவர்களின் காலத்தைக் கடந்தும் இருக்கும் என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
“செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.” --- குறள் 112; அதிகாரம் – நடுவுநிலைமை
செப்பம் உடையவன் ஆக்கம் = நடுவுநிலைமை உடையவன் ஈட்டிய பொருளும் புகழும்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து = எந்த ஒரு அழிவுமின்றி அவனின் காலம் கடந்து நிற்கும் தன்மைத்து.
நடுவுநிலைமை உடையவன் ஈட்டிய பொருளும் புகழும் எந்த ஒரு அழிவுமின்றி அவனின் காலம் கடந்து நிற்கும் தன்மைத்து.
நடுவுநிலைமை என்பது நம் இருப்புக்கு ஒரு அரண்.
கரணம் தப்பினால் மரணம் என்கிறார்களே அதுபோல! அதுதான் நடுவுநிலைமை.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios