15/05/2022 (443)
சொம்பு, செப்பு, குடம், பானை போன்ற சொற்கள் பெரும்பாலும் நீர்மப் பொருளைச் (தண்ணீர் முதலியன) சேமித்து வைக்கப் பயன்படும் பாத்திரத்தைக் குறிக்கும்.
ஜாடி, குப்பி, போத்தல் (bottle) போன்றவை, அடைப்பானோடு (cork, cap, மூடி) வரும் பொருட்கள்.
“ஜாடிக்கு ஏற்ற மூடி” என்று நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம்.
ஜாடிக்கும், சொம்பிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஜாடி செய்யும் போதே அதற்கு ஏற்றவாறு மூடி செய்துவிடுவார்கள். ஆனால், சொம்பிற்கு அவ்வாறு மூடி செய்ய மாட்டார்கள். மாறாக, அதற்கு ஏற்றார்போல் ஒரு தட்டினை (plate) மூடியாக நாம் பயன் படுத்துவோம்.
சொம்பிற்கு ஏற்ற தட்டுன்னு சொல்ல மாட்டோம். இரண்டும் சேர்ந்து இருக்கும், ஆனா இருக்காது! சொம்பு சொஞ்சம் ஆட்டம் கண்டால், அந்த தட்டு நழுவிடும். சொம்பிலிருந்தப் பொருள் நட்டமாயிடும்.
என்னதான் தட்டை, சொம்பு தன் தலைமேல, தூக்கி வைத்திருந்தாலும் எப்படா இந்த சொம்பு ஆட்டம் காணும், நாம நைசா நழுவி, காலி பண்ணலாமென்று இருக்கும்.
இப்பல்லாம், எனக்கு தட்டுங்களைப் பார்த்தாலே சந்தேகமாகவே இருக்கு. தட்டுங்களாக இருந்தாலும் சரி, கைத்தட்டுகளாக இருந்தாலும் சரி!
சரி, என்ன இன்றைக்கு சொம்பு தூக்கிட்டு இருக்கேன்ன்னு கேட்டால் காரணம் இருக்கு.
இந்த செய்தியெல்லாம் நம்ம சரக்கு இல்லைங்க. நம் பேராசானின் சரக்கு.
சும்மா சொல்லாதே, வள்ளுவப் பெருமானுக்கு வேற வேலை இல்லையான்னு கேட்கறீங்க அதானே? சொம்பு, தட்டு பற்றியெல்லாமா அவர் ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்திருப்பாரு? இருந்திருக்கார் என்பதுதான் பதில்.
வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்கிறார் என்றால், எப்படி ஒரு சொம்பிற்கு ஒரு தட்டு கூடி இருப்பது போலத் தோன்றினாலும், அது ஒட்டாமலே இருக்கும். அது மட்டுமல்ல, சமயம் பார்த்து நழுவிடும். அதனால், கவனம் தேவை. அது போலத்தான் உட்பகை என்கிறார்.
“செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.” --- குறள் 887; அதிகாரம் – உட்பகை
செப்பு = சொம்பு, பாத்திரம்; புணர்ச்சி = கூடுதல்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
コメント