செய்தேமம் சாராச் ... குறள் 815
08/01/2022 (317)
போர்க்களத்தில், தன் தலைவனைத் தள்ளிவிட்டு ஓடும் குதிரை என்று தீ நட்பினைச் சொன்ன நம் பேராசான், மேலும் தொடர்கிறார்.
என்னதான் நீ சிறப்பு செய்து வைத்தாலும், ஒரு பிரச்சனை என்று வரும் போது ஒளிந்துவிடும் நட்பு இருப்பது இல்லாமலே இருக்கலாம், அதுவே நன்று என்கிறார்.
கர்ணன், தனக்கு சல்லியன்தான் தேரோட்டியாக வரவேண்டும், அவர்தான் கிருஷ்ணனுக்கு இணை என்று ஏற்றம் செய்து, வேண்டி விரும்பி, சல்லியன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி, ஏற்றுக் கொண்டான்.
ஆனால், என்ன நடந்தது? தேர்ச்சக்கரம் மண்ணில் சிக்குண்டபோது சல்லியன்,கர்ணனைக் கைவிட்டுப் போகிறான்.
விதி எனலாம், வினைப்பயன் எனலாம். காரணங்கள் ஆயிரம் சொல்லலாம். ஆனால், சல்லியனின் செயல் அழகல்லவே. அறமல்லவே. சல்லியனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே! சிறப்பு செய்யவில்லையே!
துரியோதனின் பல செயல்களை, கர்ணன் கடிந்தாலும்கூட கடைசிவரை கடன்பட்டிருந்தான் கர்ணன், நட்பின்பாற்பட்டு.
புராணக் கதையாக இருக்கலாம். கருத்தை உள்வாங்குவதற்கு உதவுகிறது அல்லவா?
அவர் அவர் வாழ்க்கையில் நிகழும் நடப்புகள், நட்புகளும் கவனத்திற்கு வரும். அதைக் கொண்டு பொறுத்திக் கொள்க.
சரி, நாம குறளுக்கு வருவோம்.
“செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.” --- குறள் 815; அதிகாரம் – தீ நட்பு
ஏமம் செய்து = போற்றி பாதுகாத்தாலும்கூட ; சாராச் சிறியவர் புன்கேண்மை = ஒரு துண்பம் வருங்கால் நம்முடன் துணையாகா தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று = இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே நன்று.
சுபச்செயல் சீக்கிரம் என்பதுபோல விலகியிருப்போம் தீ நட்பிலிருந்து!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
