top of page
Search

சீரினும் சீரல்ல ... 962

நாம் இவர்களுக்கு ‘சீர்’ செய்யனும், அவர்களுக்கு ‘சீர்’ செய்யனும் என்கிறோமே அதற்கு பொருள் அவர்களை உயர்த்தி பெருமைபடுத்தி சிறப்பு செய்கிறோம் என்று பொருள்.


சீர் என்ற சொல்லுக்கு புகழ், சிறப்பு, செல்வம் இப்படி பல பொருள்கள் இருக்காம்.


ஒரு செயல் தனக்கு, தனிப்பட்ட முறையில் மட்டும் சீரை, சிறப்பைத் தரும் என்றாலும், அதே செயல் தன் குடிக்கு ஒரு களங்கம் விளைவிக்கும் என்றால் அந்த சீரல்லாதவைகளைச் செய்ய மாட்டார்களாம்.


அவர்கள் என்ன வேண்டுவார்கள் என்றால் தம் செயல் மூலம், முதலில், புகழும், பெருமையும் தன் குடிக்குதான் சேர வேண்டும் என்பார்களாம். அதன் மூலம் அவர்களுக்கு புகழ் கிடைப்பதால் அதை “பேராண்மை” என்கிறார் நம் பேராசான்.


ஆண்மை என்றால் மானம் என்ற பொருளும் இருக்கு. இது ஏதோ ஆண்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. பேராண்மை என்றால் மானத்தில் உயர்ந்தது, சிறந்தது என்று பொருள் கொள்ள வேண்டும்.


சீரினும் சீரல்ல செய்யாரே சீரோடு

பேராண்மை வேண்டு பவர்.” --- குறள் 962; அதிகாரம் – மானம்


சீரோடு பேராண்மை வேண்டுபவர் = தன் குடிக்கு புகழொடு மானத்தைக் காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்;

சீரினும் சீரல்ல செய்யார் = தனக்கு புகழ் வருமிடத்தும் தன் குடிக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யார்.


தன் குடிக்கு புகழொடு மானத்தைக் காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தனக்கு புகழ் வருமிடத்தும் தன் குடிக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யார்.


இந்தக் குறளை அடுத்து வரும் குறள் மிக முக்கியமான குறளாம். அதை நாளை பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.




3 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page